Tuesday, January 5, 2016

நவீன இஸ்லாமிய எழுச்சியில் பெண்களின் வகிபாகம்

நவீன இஸ்லாமிய எழுச்சியில் பெண்களின் வகிபாகம்
மஸ்ஹர் ஸகரிய்யா 


இன்றைய நவீன விஞ்ஞான தொழிநுட்ப உலகில் பேசப்படும் சிந்தனைகளுள் மிகக் கவர்ச்சியான ஒரு சிந்தனையே பெண்ணியம் பற்றிய சிந்தனையாகும். ஐரோப்பாவில் ஏற்பட்ட கைத்தொழில் புரட்சி மற்றும் பிரான்சியப் புரட்சி என்பவற்றை தொடர்ந்தே பெண் விடுதலை தொடர்பான எண்ணக்கருக்கள் சர்வதேச ரீதியில் வலுப்பெறத் தொடங்கின.

மேற்கத்தேய சமூகத்தில் பெண்ணியம் தொடர்பாக முன்வைக்கப்படும் சிந்தனைகளுக்கு சமனும் எதிருமான சிந்தனைகள் முஸ்லிம் சமூகத்திலிருந்து முன்வைக்கப்படாததால் பெண்ணியல் வாதிகளின் சிந்தனைகள் பெரும் விமர்சனத்திற்குட்பட வேண்டியதாக இருப்பினும் அவர்களது சிந்தனைகளை ஏற்றுக் கொள்ளும் நிர்ப்பந்தம் நவீன உலகிற்கு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் நவீன இஸ்லாமிய எழுச்சியில் பெண்களின் வகிபாகம் தொடர்பான சில சிந்தனைகளை இக்கட்டுரையினூடாக முன்வைத்து இஸ்லாம் எதிர்பார்க்கும் பல முஸ்லிம் பெண்கள் உருவாக வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.
சமூக சீர்கேடு (பித்னா), குடும்ப கௌரவம் என்றுபெண்களைப் பயமுறுத்தி வீட்டோடு அவர்களை முடக்கும் பாரம்பரிய மரபுகளுக்கும்பெண்ணுரிமை, பெண் விடுதலை எனும் சொல்லாடல்களைப் பயன்படுத்தி பெண்களை நிர்வாணப்படுத்தி உலகின் பிரதான விளம்பரக் கவர்ச்சிப் பொருட்களாக அவர்களை மாற்றி வரும் புதிய ஐரோஅமெரிக்க தாராளவாத சிந்தனை மரபுகளுக்கு மத்தியில் நாம் வாழ்ந்து வருகின்றோம்.

Saturday, January 2, 2016

இசை கேட்டால் அவன் இஸ்லாமியன் இல்லையா?

இசை கேட்டால் அவன் இஸ்லாமியன் இல்லையா?

தொழுகையில் அல்லாகு அக்பர்என்று எப்படிக் கூறுவீர்கள்? அதைவிட இனிய இசை உண்டோ என்பதுபோல் இருக்காதா? 

காடுகள் காற்றில் இசைக்கின்றன. 
கடலின் அலைகள் இசைக்கின்றன 
முகிலினங்கள் மோதி மோதி இசைக்கின்றன. 
மழை ஒரு கச்சேரியே வைக்கிறது 
பறவைகளின் படபடக்கும் சிறகுகள் இசைக்கின்றன

தாய் தன் மழலையைக் கொஞ்சும்போதுகூட தாளலயம் கூட்டித்தான் கொஞ்சுவாள். ம்ம்... ம்ம்ம்.... ம்ம்ம்ம்ம்....... என்று இசைத்துத்தான் தாலாட்டித் தூங்க வைப்பாள். 

இப்படியாய் மனிதனின் எல்லா நிலைகளிலும் இசை நிறைந்து இருக்கிறது. அதை வேண்டாம் என்று இஸ்லாம் எப்படிச் சொல்லும். தகாத தப்பான கூடாத இசையைத்தான் குற்றமென்று சொல்லும். 

இஸ்லாம் சரியாகப் புரிந்துகொள்ளப்பட்டால் அது இரு நிலையில் தெளிவாக இருக்கும். 

இது ஹலால் இது ஹராம் 
நல்ல கவிதை ஹலால் தவறான கவிதை ஹராம் 
நல்ல இசை ஹலால் தவறான இசை ஹராம் 

Tuesday, October 28, 2014

பிறந்த உடனே பேசும் அற்புதக் குழந்தைகள்


முஹம்மத் இசாம் (நளீமி)

அறிவியல் வேகமாக வர்ச்சியடைந்து செல்லும் ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். நீண்ட கால முயற்ச்சி, ஆழமான ஆய்வு, கடுமையான உழைப்பு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு விஞ்ஞானம் கண்டிடுத்த எத்தனையோ அறிவியல் உண்மைகளையும், கோட்பாடுகளையும் அல்குர்ஆன் ஓரிண்டு வங்களில் அழகாகவும், தெளிவாகவும் கூறியிருப்பதைப் பார்த்து எத்தனையோ பேர் நிச்சயமாக இது இறை வேதம்தான் எனக் கூறி இஸ்லாத்தில் தம்மை இணைத்துக் கொண்டுள்ளனர்.

புனித அல்குர்ஆனில் பிழை கண்டுபிடிக்க வேண்டும் என முனைபவர்கள், அதிகமாக சுட்டிக்காட்டும் ஒரு சம்பவம்தான் நபி ஈஸா (அலை) அவர்களின் பிறப்பு. எந்த ஒரு ஆணும் தீண்டாமல் ஒரு குழந்தை பிறப்பது என்பதும், பிறந்த குழந்தை உடனே பேசியது என்பதும் அறிவியலுக்கு முற்று முழுதாக மாற்றமானது,  எனவே இஸ்லாம் இறை வேதம் அல்ல என்பதுவே இவர்களது வாதம். இவர்களது வாதம் சரிதானா?  என்பதை அறிவியல் ஆய்வுகள் அடிப்படையில் பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

குழந்தை உருவாக்கத்துக்கு ஆண்கள் கட்டாயம் என்ற காலம் மலையேறி, ஒரு பெண் மாத்திரமே போதும் என்ற காலத்திலேயே நாம் தற்போது வாழ்கிறோம். அதாவது, ஒரு மனிதனின் உயிரணு அல்லது மரபணுவை எடுத்து ஒரு பெண்ணின் கருவறையில் வைத்து வளர்ப்பதன் மூலம் குழந்தைகளைப் பெற்றெடுக்கலாம் என்று நவீன அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன. இந்த வழிமுறைதான் குளோனிங்என வழங்கப்படுகின்றது. 1970 களில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வழிமுறை, ஆரம்பமாக தவரங்களில் பயன்படுத்தப்பட்டு பாரிய வெற்றியையும் கண்டது.

Thursday, October 23, 2014

ரணிலுக்கு வெல்ல முடியுமா???



சுனன்த தேஷப்ரிய
தமிழில்: அஷ்கர் தஸ்லீம்

அடுத்த வருட ஆரம்பத்தில் ஜனாதிபதித் தேர்தலொன்று நடைபெறலாம் என்ற பேச்சு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. ஆளும் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக மஹிந்த ராஜபக்ஷவே முன்னிறுத்தப்படுவார். எவ்வளவுதான் சட்ட ரீதியான தர்க்கங்கள் முன்வைக்கப்பட்டாலும், அரசாங்கத்தின் பலத்துடன் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னிறுத்தப்படப்போவது மஹிந்த ராஜபக்ஷதான்.

எதுவித ஜனநாயக நடவடிக்கைகளுக்கும் இடம் வைக்காமலேயே ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் குதிக்க உள்ளார். அடக்குமுறைதான் அவரின் அரசியல் மூலோபாயம். வடக்கில் தமிழ் மக்களை வெல்வதற்காக, அங்கு உலா வரும் அதேவேளை, வடக்கையும் கிழக்கையும் வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளுக்குத் தடை செய்யப்பட்ட பிரதேசங்களாக உத்தியோகபூர்வமற்ற முறையில் ஆக்கியுள்ளார் ராஜபக்ஷ.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ளதற்கேற்ப, பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின்றி வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் வடக்குக்கும் கிழக்குக்கும்; செல்ல முடியாது. இதன் சமூக பொருளாதா விளைவுகள் யாழ் தேவி ரயிலை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைத்ததையும் விட பாரதூரமானதாகும். இது ராஜபக்ஷவின் தேர்தல் திட்டத்தில் சேதம் உண்டாக்கும் என்பது திண்ணம். என்றாலும், அவரின் அடக்குமுறை அரசியல் மூலோபாயம் தேர்தல் திட்டத்தை விடவும் உயரத்திலேயே இருக்கின்றது.

Friday, October 17, 2014

அக்ல் நக்ல் பார்வையில் பிக்ஹ்



முஹம்மத் இசாம் (நளீமி)

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருநாமத்தை கொண்டு ஆரம்பம் செய்கிறேன்.......

இஸ்லாமிய மார்க்கம் ஒரு பரிபூரண வாழ்க்கை வழிகாட்டி. இந்தப் பரிபூரணத் தன்மையை மனிதன் பரிபூரணமாக விளங்கி அதன் அடிப்படையில் தனது வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டுமென்பதற்காக வேண்டி அறிஞர்கள் இஸ்லாத்தை பல கலைகளாக கூறுபோட்டு ஆராய்கின்றனர். ஹதீஸ், உஸூலுல் ஹதீஸ், பிக்ஹ், உஸூலுல் பிக்ஹ், தப்ஸீர்,தஜ்வீத், மனாஹிஜுல் முஹத்திஸீன், மகாஸிதுஷ் ஷரீஆ, முகாரனதுல் அத்யான்……  என இஸ்லாமிய கலைகளின் பட்டியல் நீண்டுகொண்டே போகும். இவ்வாறான கலைகளில் அதிகமாக  மனித வாழ்க்கையுடன் பிண்ணிப்பினைந்த ஒன்றுதான் பிக்ஹ் ஆகும். இந்த சட்டக்கலைப் பற்றிய பரிபூரணமான ஒரு பார்வை இல்லை என்றாலோ அல்லது அதற்கே உரிய அணுகுமுறையில் அதை அணுகவில்லை என்றாலோ அதன் தாக்கமானது சமூகத்தில் உள்ள ஒவ்வொரு முஸ்லிமினதும் அன்றாட வாழ்க்கையில் பிரதிபலிக்கும் என்பதனால் அதைப் பற்றிய ஒரு தெளிவை வழங்குவதெற்கான ஒரு சிறு முயற்சியே இந்த ஆக்கம். இந்த ஆக்கத்தில் பிக்ஹ் பற்றிய ஒரு சுருக்கமான அறிமுகம், சில கிளைவிடயங்களில் முடிவான ஒரு முடிவை கூறமுடியாது என்பது பற்றிய விளக்கம் அதற்கான ஆதாரங்கள், நடைமுறையில் நாம் எதிர் நோக்கும் சில சட்டப்பிரச்சினைகளின் ஊடாக கருத்து முரன்பாட்டுக்கான சில நியாயங்கள் மற்றும் இவ்வாறான சந்தர்ப்பத்தில் நமது கடமை என்ன என்பது பற்றியதொரு தெளிவு என்பன இன்ஷா அல்லாஹ் அலசப்படும்.

Monday, October 13, 2014

பிடிவாதத்திற்கும் சகிப்புத் தன்மைக்கும் இடையில் விட்டுக் கொடுப்பு



மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி  

தமிழில் மொழிப்பெயர்க்கப்ட்ட அஷ்ஷைய்க் பின்பாஸ்(ரஹ்) அவர்களின் ஃபத்வா

கேள்வி:
நமக்குள் ஒன்றுபட்ட விடயங்களில் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வோம். முரண்பட்ட விடயங்களில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வோம்! என்ற இமாம் ஹஸனுல்பன்னா (ரஹ்) அவர்களது கூற்று சரியானதுதானா?

பதில்:
அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! அவனது தூதர் மீதும் அவரது தோழர்கள் மீதும் அல்லாஹ்வின் ஸலவாத்தும் ஸலாமும் உண்டாவதாக!
மேலே குறிப்பிட்ட கூற்று (தப்ஸீர்) அல்மனாரின் ஆசிரியர் ஷைக் ரஸீத் ரிழா அவர்களுடைய கூற்றாகும். பின்னர் ஷைய்க் ஹஸனுல்பன்னா(ரஹ்) அவர்கள் தனது ரஸாயில்களில் இதனைக் குறிப்பிட்டார். அதிகமான மக்கள் இது ஹஸனுல் பன்னா(ரஹ்) அவர்களது கருத்து எனக் கருதும் அளவுக்கு அவர் பெயரில் இக்கூற்று பிரபல்யமடைந்துவிட்டது.

மேற்படி கூற்றின் முதற்பகுதி நமக்குள் உடன்பாடான விடயங்களில் ஒருவருக் கொருவர் உதவியாக இருப்போம் என்பதாகும். இது முஸ்லிம்களுக்கு மத்தியில் கருத்து முரண்பாடில்லாத ஏகோபித்த அடிப்படையில் உள்ள நல்ல விடயங்களில் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டும் என்ற கருத்தைத் தருகின்றது.

Friday, October 10, 2014

கலாநிதி முஹம்மத் இமாரா – அறிமுகக் குறிப்பு

கலாநிதி முஹம்மத் இமாரா

சுலைஹா மைந்தன்

சமகால இஸ்லாமிய சிந்தனைக்கும் அறிவுத் துறைக்கும் மிகுந்த பங்களிப்பு செய்தவர்களுள் கலாநிதி முஹம்மத் இமாரா முதன்மையானவர். இவரது 140 க்கும் மேற்பட்ட புத்தகங்களும் ஆய்வுகளும் நவீன கால இஸ்லாமிய சிந்தனைத் தளத்தில் புதிய பல தலைப்புக்களையும் விவகாரங்களையும் ஆய்வு செய்துள்ளன. இந்தப் புத்தகங்களையும் ஆய்வுகளையும் ஒருசேரப் பார்க்கும்போது ஒரு தனிமனிதனால் இவ்வளவு ஆய்வுகளைச் செய்ய முடியுமான என பிரமிக்கும் அளவுக்கு அவை செறிவானவை.

1931 இல் எகிப்தின் கஃபருஷ் ஷெய்க் பகுதியில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த கலாநிதி இமாரா, தான் தாயின் வயிற்றில் சிசுவாக இருக்கும் போது, தனது குழந்தை ஆணாகப் பிறந்தால் அதை அறிவுக்காக அர்ப்பணிப்பதாக தனது தந்தை நினைத்திருந்ததாக ஒரு பேட்டியின்போது குறிப்பிட்டிருந்தார். கலாநிதி இமாரா சிறு வயதிலேயே அல்குர்ஆனை மனனமிட்டு தஜ்வீத் கலையிலும் சிறந்து விளங்கினார். பின்னர், தாருல் உலூமில் இஸ்லாமியத் துறையில் கலாநிதிப் பட்டம் வரை கல்வியைத் தொடர்ந்தார்.

சமகால உலகில் இஸ்லாத்தை நடுநிலைமையாக முன்வைக்கும் சிந்தனையாளர் வரிசையில் இடம்பிடிக்கும் கலாநிதி இமாரா எகிப்து அல்அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய ஆய்வுகளுக்கான மன்றம், இஸ்லாமிய சிந்தனைக்கான சர்வதேச நிறுவனம் ஆகியவற்றின் உறுப்பினராகவும் இருக்கின்றார்.