அஷ்கர் தஸ்லீம்
என்றுமில்லாதது போல் இஸ்லாத்தைப் பற்றித் தேடுபவர்களது தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதனை அவதானிக்கின்றோம். உலகின் அனைத்து விவகாரங்களையும் அனைத்து அறிவுத் துறைகளையும் இஸ்லாமியப் பின்னணியோடு புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்து வருவதனையும் அவதானிக்கின்றோம். மிகவும் ஆரோக்கியமான இந்தத் தோற்றப்பாடு ஐரோப்பா முதல் ஆசியா வரை வியாபித்திருக்கின்றமை இன்னுமொரு விஷயம்.
இத்தனைக்கும் எமது தமிழ் மொழிச் சூழலில் இஸ்லாத்தை ஒரு முழு வாழ்க்கைத் திட்டமாக முன்வைக்கும் முறைமை அவ்வளவு வளர்ச்சியுற்றதாகத் தெரிவதில்லை. இஸ்லாத்தை ஒரு மாற்று சிந்தனையாக, ஒரு நாகரிகத் திட்டமாக, ஒரு வாழ்க்கை முறையாக முன்வைக்கும் போக்கு இன்னும் வலுப்படுத்தப்பட வேண்டிய தேவை அதிகம் உணரப்படுகின்றது.
சமகால உலகு எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள், சிக்கல்கள், சவால்கள் மற்றும் தற்கால உலகில் செல்வாக்குச் செலுத்துகின்ற முதலாளித்துவம், உலகமயமாக்கம், மனித உரிமைகள், ஜனநாயகம், லிபரலிஸம், மதச்சார்பின்மை முதலிய சிந்தனைகள் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாட்டை அல்லது சிந்தனையை முன்வைப்பதனையே நாம் நவீன இஸ்லாமிய சிந்தனை என சுருக்கமாக வழங்குகின்றோம்.
