Tuesday, January 5, 2016

நவீன இஸ்லாமிய எழுச்சியில் பெண்களின் வகிபாகம்

நவீன இஸ்லாமிய எழுச்சியில் பெண்களின் வகிபாகம்
மஸ்ஹர் ஸகரிய்யா 


இன்றைய நவீன விஞ்ஞான தொழிநுட்ப உலகில் பேசப்படும் சிந்தனைகளுள் மிகக் கவர்ச்சியான ஒரு சிந்தனையே பெண்ணியம் பற்றிய சிந்தனையாகும். ஐரோப்பாவில் ஏற்பட்ட கைத்தொழில் புரட்சி மற்றும் பிரான்சியப் புரட்சி என்பவற்றை தொடர்ந்தே பெண் விடுதலை தொடர்பான எண்ணக்கருக்கள் சர்வதேச ரீதியில் வலுப்பெறத் தொடங்கின.

மேற்கத்தேய சமூகத்தில் பெண்ணியம் தொடர்பாக முன்வைக்கப்படும் சிந்தனைகளுக்கு சமனும் எதிருமான சிந்தனைகள் முஸ்லிம் சமூகத்திலிருந்து முன்வைக்கப்படாததால் பெண்ணியல் வாதிகளின் சிந்தனைகள் பெரும் விமர்சனத்திற்குட்பட வேண்டியதாக இருப்பினும் அவர்களது சிந்தனைகளை ஏற்றுக் கொள்ளும் நிர்ப்பந்தம் நவீன உலகிற்கு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் நவீன இஸ்லாமிய எழுச்சியில் பெண்களின் வகிபாகம் தொடர்பான சில சிந்தனைகளை இக்கட்டுரையினூடாக முன்வைத்து இஸ்லாம் எதிர்பார்க்கும் பல முஸ்லிம் பெண்கள் உருவாக வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.
சமூக சீர்கேடு (பித்னா), குடும்ப கௌரவம் என்றுபெண்களைப் பயமுறுத்தி வீட்டோடு அவர்களை முடக்கும் பாரம்பரிய மரபுகளுக்கும்பெண்ணுரிமை, பெண் விடுதலை எனும் சொல்லாடல்களைப் பயன்படுத்தி பெண்களை நிர்வாணப்படுத்தி உலகின் பிரதான விளம்பரக் கவர்ச்சிப் பொருட்களாக அவர்களை மாற்றி வரும் புதிய ஐரோஅமெரிக்க தாராளவாத சிந்தனை மரபுகளுக்கு மத்தியில் நாம் வாழ்ந்து வருகின்றோம்.

இவ்விரு சிந்தனைகளும் மனித சிந்தனையை நேர்முரணாண இரு தீவிர நிலைகளுக்கு இட்டு சென்றிருப்பதன் காரணமாகவே பெண்கள் தொடர்பான ஆய்வுகள் உலகின் அனைவரினதும் கவனத்தையும் ஈர்த்து வருகின்றன.
அண்மையில் ஒரு சஞ்சிகை பூகோள ரீதியில் பெண்களின் முன்னேற்றத்தை தரப்படுத்தி ஓர் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டது. பெண்கள் தொடர்பாக நிலவிவரும் மேற்கூறிய இரு துருவ நிலைப்பாடுகளின் விளைவாக ஏற்பட்ட அறிக்கையாகவே இந்த அறிக்கையை நோக்க வேண்டி இருக்கின்றது.
எந்ந நாடுகளிலெல்லாம் பெண்ணியம் தொடர்பான சிந்தனைகள் அதிகம் பேசப்பட்டுபெண்கள் கவர்ச்சிப் பொருட்களாக மாற்றப்பட்டுள்ளனரோ அந்த நாடுகள் இவ்வறிக்கையில் முதலிடங்களைப்பெற்றுள்ளன. அதே சமயம் மிக பிற்போக்கான சமூகமாக இன்றும் கருதப்படும் ஆபிரிக்க நாடுகள் தரப்படுத்தலில் இறுதி இடங்களை பெற்றுள்ளன.
இவ்வாய்வறிக்கையின் சுருக்கம் பெண்களுக்கு பூரண சுதந்திரத்தைக் கொடுத்து சமூக வாழ்வில் அவர்களுக்கும் சம அந்தஸ்தை கொடுப்போர் மேற்கத்தேய சமூகம். பெண்கள் தொடர்பான பிற்போக்கான சிந்தனைகளுடன் இன்றும் வாழும் ஒரு சமூகமே முஸ்லிம் சமூகம் என்ற இனவாதக்கருத்துகள் இவ்வாய்வுகட்டுரையூனூடாக மறைமுகமாக முன்வைக்கப்பட்டிருப்பதை அறிய முடிகிறது.
உண்மையில் இஸ்லாம் இவ்விரு துருவ சிந்தனைகளுக்கும் அப்பாற்பட்ட ஒரு நடுநிலையான சிந்தனையொன்றை முன்வைக்கின்றது. அந்த நடுநிலையான சிந்தனையை நடைமுறைப்படுத்திக் காட்டுவதில் தொடர்ந்தேர்ச்சையாக முஸ்லிம் சமூகம் தவறிழைத்து வருவதன் காரணமாக இஸ்லாம்கூறும் பெண்கள் தொடர்பான முற்போக்கான சிந்தனைகள் தொடர்ந்தும் ஊடகங்களால் இரட்டடிப்பு செய்யப்பட்டு வருகின்றது.
பெண்களைப் போகப் பொருட்களாகவும்ஆன்மாவற்ற உயிர்களாகவும் பேய்களாகவும் வர்ணித்துக் கொண்டிருந்த உலகிற்கு பெண்ணியம், பெண்விடுதலை என்ற கோஷங்களை முன்வைத்து எந்த ஒரு புரட்சியும் ஏற்படலாம் என்பதற்கு எவ்வித சாத்தியக்கூறுகளும் இல்லாதிருந்த காலப்பிரிவிலேயே இஸ்லாம் பெண்ணுரிமைகளை அறிமுகப்படுத்தி சமூகத்தில் ஆண்களுக்கு நிகரான அந்தஸ்தைப் பெறுவோராக அவர்களை அடையாளப்படுத்தி அவர்களை சங்கைப்படுத்திய மார்க்கமே இஸ்லாம் என்றால் மிகையாகாது.
பெண்கள் ஆண்களுக்காக படைக்கபடவில்லை. சமூகத்தில் ஆணும், பெண்ணும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களை ஒத்தவர்கள். பெண்ணிண் மார்க்க பங்களிப்பு மற்றும் அவளின் சமூக அந்தஸ்து என்பன ஆணை விட எந்த வகையிலும் குறைந்ததல்ல என்ற கருத்துகளை இஸ்லாம் 14 நூற்றாண்டுகளுக்கு முன்னரே முன்வைத்தது.
இந்த சிந்தனைகளைத் தெரியாத மேற்கத்தேய சமூகம் ஒரு புறமும்இந்த சிந்தனைகளை நடைமுறைப்படுத்திக் காட்ட முயற்சிக்காத அல்லது பிழையாக விளங்கி கொண்டுள்ள முஸ்லிம் சமூகம் மறுபுறமும் இருப்பதன் காரணமாக இன்று முஸ்லிம் பெண்களின் சமூக பங்களிப்பு தொடர்ந்தும் அபிப்பிராய பேதங்களுக்குட்பட்ட, மேற்கு நாடுகளால் விமர்சிக்கப்படும் பிரச்சினையாகவே தொடர்ந்தும்இருந்து வருகின்றது.
எமது சமூகத்தில் பெண்கள் தொடர்பாக பேசப்படுகின்ற, எழுதப்படுகின்ற விடயங்கள் அதிகம் என்பது மறுக்கத்தக்க விடயமல்ல. எமது நூலகங்களில் பெண்கள் விவகாரத்துடன் தொடர்புறும் நூற்கள் அதிகம் உள்ளன. எனினும் அவற்றுள் பெரும்பாலானவை பெண்களின் உடலமைப்பு, தோற்ற அமைப்பு என்பவற்றை மையப்படுத்தி அவர்களது பொறுப்புக்களை வரையறுக்கும் முயற்சிகளையே அவை செய்து வருகின்றன. பெண்களின் சமூக பங்களிப்பு, பெண்கள் கல்வி, பெண்கள் அரசியல் பிரவேசம், பெண்கள் தலைமைப் பொறுப்புக்களை ஏற்றல் போன்ற சிந்தனைகள் ஆங்காங்கே எப்போதாவது பேசப்படும் சர்ச்சைக்குட்பட்ட சிந்தனைகளாகவே இருந்து வருகின்றன.
அந்த வகையில் முஸ்லிம் சமூகத்தில் பெண்களின் வளர்ச்சி தேக்க நிலையிலே இன்றும் உள்ளது என்பதை ஏற்கத்தான் வேண்டும். அதே சமயம் மேற்கில் பெண்களின் கட்டற்ற சுதந்திரம் ஒரு வளர்ச்சியல்ல. அது ஒரு வீக்கமே என்பதை அவர்கள் கிட்டிய எதிர்காலத்தில் உணர்ந்து கொள்வார்கள். இத்தேக்க நிலைக்கும், வீக்க நிலைக்கும் மத்தியில் ஒரு முஸ்லிம் பெண் எப்படி வாழ வேண்டும், மார்க்கத்திற்கு அவள் எத்தகைய பங்களிப்புக்களை வழங்க முடியும் என்ற தெளிவான சிந்தனைகளை அல்குர்ஆனும்ஸுன்னாவும் இஸ்லாமிய வரலாறும் எமக்கு அறிமுகப்படுத்துகின்றது.
இன்று இஸ்லாம் எழுச்சியடைந்து வருகின்றது என்பதற்கான பிரதான சான்று முஸ்லிம் பெண்களில் ஏற்பட்டு வரும் மாற்றங்களே. எனினும் தற்போதிருக்கின்ற நிலை வளர்ச்சியின் ஒரு படி நிலையே அன்றி முழுமையான வளர்ச்சியல்ல.
முன்பொரு காலம் இருந்தது. அப்போது வீட்டை விட்டு தனது ஆயுட்காலத்தில் இருமுறை வெளியேறும் பெண்ணே சிறந்த பெண்ணாகக் கருதப்பட்டாள். அவள் பிறந்த வீட்டிலிருந்து கணவனின் வீட்டிற்கு போகும் சந்தர்ப்பம், கணவனின் வீட்டிலிருந்து மண்ணறைக்கு போகும் சந்தர்ப்பம் என்பவையே அவை. அன்று, பெண்கள் கல்வி கற்கக் கூடாது; ஏனெனில் பெண்கள் வெளியே செல்வதால் பல குழப்பங்கள் ஏற்படுகின்றன் என்ற மனப்பதிவே காணப்பட்டது. ஆச்சரியம் என்னவெனில் இக்கருத்துக்கள் இஸ்லாத்தின் பெயரால் முன்வைக்கப்பட்டமையாகும். இஸ்லாம் இத்தகையதொரு விடயத்தை எமக்குக் கற்று தரவில்லை.
மதீனத்து பெண்கள் ஐவேளை தொழுகைக்கும் பள்ளிக்குச் செல்வார்கள். ஜுமுஆவுக்குச் செல்வார்கள். மதீனாவில் முனாபிக்களும்யூதர்களும் அதிகமாக வாழ்ந்த காலத்திலேயே இந்நடைமுறை பேணப்பட்டு வந்தது.
தொழுகையில் ஆண்களின் வரிசைகளுக்குப் பின்னால் பெண்களின் வரிசைகள் காணப்படும். பள்ளிவாயலில் பெண்கள் நுழைவதற்கென்று பாபுந்நிஸா (பெண்களின் நுழைவாயில்) என்ற வாயிலே மஸ்ஜிதுந்நபவியில் காணப்பட்டது. ஒரு மனிதன் தினந்தோறும்நபி(ஸல்) அவர்களது மஸ்ஜிதுந்நபவியில் ஆண்களின் வரிசையில் இறுதி வரிசையிலேயே தொழுது வந்தார். அவர் தொடர்ந்தும் இறுதி வரிசையில் இருப்பதற்கான காரணம் ருகூவுக்குச் செல்லும் போது தனது கைகளுக்கு இடையால் பின்னால் தொழும் பெண்களை பார்ப்பதற்காகவாகும். இந்த விடயம் நபி (ஸல்) அவர்களது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டபோது பித்னா ஏற்படுகின்றது எண்ணி நபி (ஸல்) அவர்கள் பெண்களின் வருகையை தடை செய்யவில்லை.
அல்லாஹுத்தஆலா பெண்ணை ஆணுக்காகப் படைக்கவில்லை. மனிதனை எந்த நோக்கத்திற்காகப் படைத்தானோ அதே நோக்கத்திற்காகத் தான் பெண்ணையும் படைத்தான். அல்லாஹுத்தஆலா மனிதனது அடிப்படையான பணியைப் பற்றி பேசும் போது இரு சாராரும் பரஸ்பர ஒத்துழைப்புடன் நிறைவேற்ற வேண்டிய பணியாகவே அப்பணியை எடுத்து காட்டினான்.
விசுவாசம் கொண்ட ஆண்களும்விசுவாசம் கொண்ட பெண்களும் ஒருவருக்கொருவர் நேசமாக நடந்து கொள்வார்கள், நன்மையை ஏவி தீமையை தடுக்கம் பணியையும் செய்வார்கள்.
எனவே பெண்ணும் அல்லாஹுத்தஆலா ஏவிய இப்பணியை செய்வதற்காகவே படைக்கப்பட்டிருக்கின்றாள். எனவே அவளை தடுக்கும் உரிமை கணவனுக்கோ, தந்தைக்கோ, சகோதரனுக்கோ கிடையாது. எனினும் பெண்ணின்வீடு என்ற அதிமுக்கியமான தஃவா களத்தை ஒழுங்குபடுத்திய பின்னரே சமூகம் என்ற களத்திற்குப் பிரவேசிக்க வேண்டும்.
அந்த அணுகுமுறையைத்தான் ஸஹாபா பெண்மணிகள் கையாண்டனர். ஆண்கள் அனைவரும் சமூக களத்தில் இறை பணியை செய்து கொண்டிருக்கும் போது பெண்கள் வீட்டுச்சூழலிருந்து சமூகத்தைப் பாதுகாக்கும் ஒரு பரம்பரையை கட்டியெழுப்பியதுடன் தமது சக்திக்கும், இயலுமைக்கும்ஏற்ப பல பொறுப்புக்களை ஏற்றுச் செயல்பட்டனர்.
புனித இஸ்லாத்திற்குள் முதலில் நுழைந்த கதீஜா அம்மையார் தனது செல்வத்தை இந்த மார்க்கத்திற்காக முதலீடு செய்தார்கள். தனது கணவனுக்கு நல்லதொரு மனைவியாகவும், தனது பிள்ளைகளுக்கு நல்லதொரு தாயாகவும் செயற்பட்டுள்ளார்கள்.
ஆஇஷா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் யுத்த களத்திற்குச் சென்றார்கள், யுத்தத்தில் காயப்பட்டவர்களுக்கு வைத்தியம் செய்தார்கள். நபி (ஸல்) அவர்களது மரணத்தின் பின் ஸஹாபாக்களுக்கும் தாபிஈன்களுக்கும் ஹதீஸ்களை கற்பிக்கும் மிகச் சிறந்ததோர் ஆசிரியராக (முஹத்திஸா) இருந்துள்ளார்கள்.
சுமையா (ரலி) அவர்கள் இஸ்லாத்திற்காக உயிர் நீத்த முதல் மனிதர் என்ற பெருமையை பெற்று கொண்ட ஒரு பெண். அஸ்மா (ரலி) அன்ஹா, உம்முல் பழல் (ரலி), ஹன்ஸா(ரலி) போன்ற ஸஹாபாப் பெண்களின் வரலாறுகளை வாசித்துப் பாருங்கள். அவர்கள் மிகச்சிறந்த பரம்பரையொன்றை வளர்த்து அப்பிள்ளைகளை மார்க்கத்திற்காகவே அர்ப்பணித்தார்கள்.
மார்க்கத்தை கற்று கொள்வதில் அன்றைய பெண்கள் வெட்கப்படவில்லை. ஆண்களுடன் போட்டி போட்டு கொண்டு மார்க்கத்தை கற்பதில் ஆர்வத்துடன் செயற்பட்டனர். நபி (ஸல்) அவர்களுடன் பேசி பெண்கள் மார்க்கத்தை கற்பதற்கு தனியான ஒரு நாளையே வாரந்தோறும் ஒதுக்கி கொண்டார்கள்.
மார்க்கத்திற்காக வாழ்ந்து தம்மை மார்க்கத்திற்காகவே அர்ப்பணித்தக் கொண்ட மனிதர்களின் வரலாறுகள் பேசப்படும் போது அதிக ஆண்களின் வரலாறுகளே பேசப்படுகின்றன. எனினும்மார்க்கத்தை பாதுகாப்பதில் பெண்களும் மிகப்பெரும் பங்களிப்பு செய்துள்ளனர் என்பதை எம்மால் மறந்து விடமுடியாது. ஒன்றில் அவர்கள் ஆண்களின் தியாகத்தின் பிண்ணியில் இருந்திருப்பார்கள். அல்லது அவர்களே மிகப் பெரும் தியாகியாக இருந்திருப்பார்கள்.
நாம் ஏற்கனவே மார்க்கத்திற்காக உயிர்தியாகம் செய்த முதல் மனிதர் ஒரு முஸ்லிம் பெண்மணி என்று பார்த்தோம். மார்க்கத்தை பாதுகாத்து கொள்ளும் நோக்குடன் இடம் பெற்ற முதலாவது ஹிஜ்ரத்தான அபீஸீனியாவுக்கான ஹிஜ்ரத்தில் ஆண்கள் 83 பேருடன் 19 பெண்களும் கலந்து கொண்டனர். குறைஷி காபிர்கள் இஸ்லாத்தைத் தீர்த்து கட்டும் நோக்கில் முஸ்லிம்களை அபூதாலிப் கணவாயில் போட்டு 3 வருடங்கள் அவர்களுடன் இருந்த தொடர்பை முழுமையாக துண்டித்து கொண்டனர். அங்கு முஸ்லிம்கள் அனைவரும் உண்ண உணவோ தாகத்தை தீர்க்கும் நீரோ இன்றி அதிக சிரமப்பட்டனர். அந்த சோதனையால் அதிகம் சிரமப்பட்டவர்கள் பெண்களும்குழந்தைகளும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹிஜ்ரத் என்ற 300 கி.மீ தொலைவான நீண்ட பயணத்தை எடுத்து கொள்ளுங்கள். உயர்ந்த மலைகள், அபாயம் நிறைந்த பாதைகள், இவற்றை முஸ்லிம் பெண்கள் கடந்து சென்று முஹாஜிரா என்ற அந்தஸ்தைப் பெற்றுக் கொள்ளவில்லையா? உம்மு ஸலாமா (ரழி) அவர்கள் வழித்துணையின்றி தனியாக இம்மிகப்பெரும் தூரத்தை கடந்து செல்லவில்லையா? கர்ப்பிணி தாய்மார்கள், பால்குடி தாய்மார்கள் வயோதிப பெண்கள் என்ற எவ்வித பாகுபாடுமின்றி அனைவரும் இம்மாபெரும் சோதனையை எதிர்கொண்டார்கள்.
உஹத் யுத்தத்தில் நபி (ஸல்) அவர்களை தாக்க வந்து கொண்டிருந்த இப்னு கமிஆவை தடுத்து நிறுத்தி அவனுடன் போராடியதில் உம்மு அமாரா (ரழி) அவர்களது உடலில் 12 காயங்கள் ஏற்பட்டன. இப்போரில் ஆயிஷா (ரழி) மற்றும் உம்மு ஸுலைம் (ரழி) போன்றோர் தொடர்ந்தும் காயப்பட்ட வீரர்களுக்கு வைத்தியம் செய்து பராமரித்து கொண்டிருந்தனர். பலமுறை தண்ணீர் நிரப்பி வந்து படைவீரர்களின் தாகத்தை தணிக்க உதவினர். உம்மு ஸல்மா (ரழி) அவர்கள் சிதறி ஓடிக்கொண்டிருந்த முஃமீன்களை அழைத்து ரோஷமூட்டி யுத்தத்தில் ஈடுபட செய்தார்கள். இப்படி அன்றைய முஸ்லிம் பெண்கள் நல்ல தாய்மார்களாக, நல்ல குடும்பத் தலைவிகளாக இருந்துள்ளதுடன் அவர்களில் பலர் சமூக களங்களிலும் தம்மால் இயலுமான பங்களிப்பை செய்திருப்பதை காண முடியும்.
நேர்வழிபெற்ற 4 கலீபாக்களின் காலத்திலும் இத்தகைய புரட்சிப் பெண்கள் பலரை நாம் காண்கின்றோம். அவர்கள் சமூகத்தில் அனைத்து தளங்களிலும் தமது பங்களிப்புக்களை வழங்கி வந்தனர். ஸஹாபி பெண்களிடமிருந்து மார்க்கத்தை கற்கும் நோக்கில் பல தாபியீன்கள் அவர்களை சந்திக்க வந்துள்ளனர். பிற்காலங்களில் பெண்களுக்கென்று தனியான இல்முடைய மஜ்லிஸ்கள் இருந்ததற்கான சான்றுகள் காணப்படுகின்றன.
பெண்களின் பிரதான பொறுப்பு ஒரு தாயாக, குடும்பத் தலைவியாக இருந்து மிகச்சிறந்த சமூகமொன்றை உருவாக்குவதாகும். எனினும் இதன் பொருள் அவள் வீட்டில் முடங்கி கிடக்க வேண்டும் என்பதல்ல. பெண்கள் ஆண்களுக்கு பணிவிடை செய்வதற்காக படைக்கபட்டவர்களல்ல. ஒரு பெண்ணிண் பிரதான பணி எப்போதும் வீட்டு வேலைகளை செய்து கொண்டிருப்பது என்ற கருத்தை நாம் மார்க்கத்தில் எங்கும் காண முடியாது. அப்படி ஒரு பெண் இருப்பது கடமையுமல்ல. வரவேற்கத்தக்கது என்பதே பெரும்பான்மையான அறிஞர்களின் கருத்து. எனவே அவளது பணியை அவள் செய்வதற்கு யாரும் தடையாக இருக்க முடியாது.
பெண்கள் விவாகரத்தில் இன்று மற்றொரு பிழையான மனப்பதிவும் சமூகத்தை ஆட்கொண்டுள்ளன. ஒரு பெண் கல்வி கற்கலாம், பல்கலைக்கழகத்திற்கு செல்லலாம். ஏன் தனியாக வெளிநாட்டிற்கு தொழில் வாய்ப்புக்களுக்காகக் கூடச் செல்லலாம். ஆனால் ஐவேளை தொழுகைக்குச் செல்வதற்கு மட்டும் தடை விதிக்கப்படுகின்றது. இது தொடர்பாக நவீன கால அறிஞர் யூசுப் அல்கர்ழாவி பின்வருமாறு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றார்.
நான் தென்னாசிய நாடுகளுக்குச் சென்ற போது பள்ளிவாயல்களில் ஒரு பெண்ணையேனும் என்னால் காண முடியவில்லை. இது தொடர்பாக நான் அவர்களிடம் வினவிய போது இமாம் அபூஹனீபா பெண்கள் பள்ளிக்கு வருவதை தடை செய்துள்ளார்கள் என்று கூறினார்கள். அப்போது நான் இக்கருத்து அபூஹனீபாவின் பழைய கருத்து. தற்போது பெண் சந்தைக்கும், பல்கலைக்கழகத்திற்கும் செல்கின்றாள். விமானத்தில் தனியாக பறக்கின்றார். ஏன் அவள் பள்ளிக்கு வருவதை மட்டும் தடை செய்கின்றீர்கள்?’ என்று கேட்டார். சமூக பாரதூர செயல்கள் தவிர்ந்த ஏனைய விடயங்களில் பெண்கள் நீதிபதியாகக் கூட இருக்க முடியும் என்று கூறியவரே அபூஹனீபா. அந்த மனிதரின் பெயரைகூறி நீங்கள் இத்தகைய குறுகிய நிலைப்பாட்டுக்கு வந்துள்ளீர்களேஎன்று கூறி கர்ளாவி அவர்களை கண்டித்தார்கள்.
ஒரு பெண் பள்ளிக்கு தொழுகைக்காகவோ அல்லது கற்பதற்காகவோ செல்வதற்கு அனுமதி கேட்டால் தடை செய்யும் அதிகாரம் ஆணுக்கு இல்லை என்று கூறுகின்ற மார்க்கமே இஸ்லாம். அத்தகைய மார்க்கத்தின் பெயரை பயன்படுத்தி எப்படி பெண்களை வீட்டில் அடைத்து வைக்க முடியும்?
எமது சமூகத்தில் இருக்கின்ற ஆண்களின் நிலை வியப்பை அளிக்கின்றது. அவர்கள் தமது மனைவிமார்களின் பெயர்களையோ அல்லது தாய்மார்களின் பெயர்களையோ அல்லது சகோதரிகளின் பெயர்களையோ உச்சரிப்பதற்கே கூச்சப்படுகின்றார்கள். பெண்களின் பெயர்களை அவர்கள் தரக்குறைவாக நினைக்கின்றனரா? அல்லது வேறு காரணங்கள் இருக்கின்றனவா? அதே சமயம் ஸஹாபாப் பெண்களின் பெயர்களை கூச்சப்படாமல் சொல்கின்றோம் ஏன் இந்த இரட்டை வேடம்?
அல்குர்ஆனும்அஸ்ஸுன்னாவும்வரலாறும் எமக்கு முன்மாதிரியான பெண் ஆளுமைகள் பலரை அறிமுகப்படுத்துகின்றன. பெண்கள் தொடர்பான சரியான எண்ணக்கருக்கள் மறைய ஆரம்பித்து மார்க்கத்தின் பெயரால் பெண் எப்போது வீட்டில் அமர்த்தப்பட்டாளோ அன்று இஸ்லாமிய சமூகத்தின் வீழ்ச்சியும் ஆரம்பமாக தொடங்கின. சமூகத்திலிருந்து பெண்கள் முழுமையாக ஓரங்கட்டப்பட்டனர்.
பெண்ணியல் வாதிகள் கூறுவது போன்று முஸ்லிம் சமூகத்தில் பெண் வன்முறை ,பெண் அடிமைத்துவம் என்பன அன்று உருவாகாவிட்டாலும் கூட மார்க்கத்தின் பெயரால் அவளை சமூகத்தை விட்டு ஓரங்கட்டும் நடவடிக்கை ஆரம்பமானது. பெண்களிடம் கலந்தாலோசனை செய்து விட்டு அதற்கு மாற்றமாக முடிவெடுங்கள், அவர்களுக்கு எழுத்தறிவைக் கற்பிக்க வேண்டாம். பள்ளிக்குள் அனுமதிக்க வேண்டாம். என்ற கருத்துக்கள் முஸ்லிம்களின் உள்ளத்தில் ஆழமாக பதிய ஆரம்பித்தன.
பெண்ணை சமூகத்திலிருந்து ஓரம் கட்டும் முயற்சியை அன்றைய முஸ்லிம் சமூகம் பெண் வன்முறையாக கருதவில்லை. பெண்ணும் கூட அது தன் மீது ஏற்படுத்தபட்ட ஒரு அடிமைத்துவ வாழ்வு என்று எண்ணவில்லை. பெண்கள் தமது வீட்டையும் குடும்பத்தையும்நிர்வகிப்பதில் அவர்களிடம் எத்தகைய தயக்கமும் இருக்கவில்லை. ஏனெனில் பெண்ணினத்திற்குக் கிடைக்க வேண்டிய மரியாதையும்பாதுகாப்பும் அபரிமிதமாகவே கிடைத்தது.
நாகரீகம் வளர வளர பெண் வீட்டை விட்டு காலடி வைக்க துவங்கியதும் தான் பெண் சுதந்திரம் என்பது உணரப்பட்டு அதன் தேவை அறியப்பட்டு அந்த உணர்வு எண்ணமாகி, சிந்தனையாகி இன்றைய கால கட்டத்தில் சொல்லாகி, செயலாக வடிவெடுத்துள்ளது. இந்த சிந்தனை எல்லை கடந்து பேசப்பட்டதன் காரணமாக மேற்கத்தேய சூழலில் பெண்ணியம் சார்ந்த சிந்தனைகள் உருப்பெற்று மேற்கில் பெண்களுக்கு எல்லை மீறிய சுதந்திரம் கொடுக்கப்பட்டன. கூடவே முஸ்லிம் நாடுகளில் பெண்ணை இஸ்லாம் அடக்கி ஒடுக்குகின்றது என்ற சிந்தனையும் பரப்பப்பட்டது. ஆப்கானிஸ்தானில் தாலிபானகளின் பெண்கள் குறித்த கருத்துக்களும், ஆபிரிக்க நாடுகளில் முஸ்லிம் பெண்களின் பிற்போக்கான சிந்தனைகளும் அவர்களது கருத்துக்களுக்கு ஆதாரம்களாகக்கொள்ளப்பட்டன. பெண்ணியல்வாதிகளின் இக்கருத்துக்களுக்குச் சார்பாக முஸ்லிம் சமூகத்திலிருந்தும் ஓரிரு குரல்கள் ஒலிக்கவே அந்த நிலைப்பாடு உறுதியானது.
உண்மையில் முஸ்லிம் சமூகத்தில் பெண்களின் பங்களிப்பு ஒப்பீட்டளவில் இன்று மிகக்குறைவாகவே காணப்படுகிறது. சமூக தளத்திற்குள் காலடி எடுத்து வைத்து அவள் தனது பங்களிப்பை வழங்குவது ஒரு புறமிருக்கட்டும். அவளது முதற்களமான வீட்டைக் கூட அவளால் இன்னும் ஒழுங்குபடுத்திக் கொள்ள முடியாத பலவீனம் காணப்படுகின்றது. இந்நிலை முஸ்லிம் சமூகத்திற்குள் திட்டமிட்டு ஏற்படுத்தபட்ட ஒரு நிலை என்பதை விட பெண்களின் மார்க்க அறிவீனத்தின் காரணமாக அவர்களே தமக்கு இழைத்து கொண்ட ஒரு அநீதமே இது. இந்த அநீதியிலிருந்து முஸ்லிம் பெண் தன்னை காத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். முஸ்லிம் பெண்ணின் பிற்போக்கான நடைமுறைகளைப் பயன்படுத்தி இஸ்லாமும் முஸ்லிம் சமூகமும் குற்றஞ்சாட்டப்படும் பயங்கரத்திற்கெதிராக போராடும் மிகப் பெரும் பொறுப்பை முஸ்லிம் பெண் சுமந்து கொள்ள வேண்டும். அது சிந்தனையாகி சொல்லாகி செயலாக நடைமுறையாக மாற வேண்டும். பெண்ணியம் பேசும் மனிதர்களின் சிந்தனைகளை இஸ்லாமிய மூலாதாரங்களின் துணை கொண்டு எதிர்க்கும் ஆற்றலை எப்போது முஸ்லிம் பெண் சமூகம் பெற்றுக்கொள்ளுமோ அது இஸ்லாமிய எழுச்சியின் முக்கிய மைல் கல்லாக மாறி விடும். இன்று உலக சனத்தொகையில் ஏறக்குறைய 90 கோடி முஸ்லிம் பெணகள் உள்ளனர். இவர்களுள் விரல் விட்டெண்ணக் கூடிய பெண் ஆளுமைகளே இப்பெரும் பொறுப்பை சுமந்துள்ளனர். ஆனால் இஸ்லாத்தின் எதிரிகள் பெண்ணிய சிந்தனைகளின் அடிப்படையில் பல்லாயிரம் அமைப்புக்களையே உருவாக்கி வெற்றிகரமாக தமது பணியை செய்து வருகின்றனர். ஆனால் சத்தியத்தின் பக்கம் உள்ள எம்மிடம் ஆஇஷாக்களாக, உம்மு அமாராக்களாக, சுமையாக்களாக ஓரிரு பெண்களே உருவாகியுள்ளனர்.
எனினும் அந்த விரல்விட்டெண்ணக்கூடிய பெண்களின் பங்களிப்பு இன்று முஸ்லிம் உலகின் போக்கையே தலைகீழாக மாற்றி வருகின்றது. இப்பெண்களின் தொகை அதிகரிக்கும் பட்சம் மிக வேகமான இஸ்லாமிய எழுச்சியொன்றை முஸ்லிம் உலகில் ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை எமது சமூகத்தில் ஏற்படுத்துவதற்காக நவீன இஸ்லாமிய எழுச்சிக்குப் பங்களிப்புச் செய்த சில முஸ்லிம் பெண் ஆளுமைகளை அறிமுகப்படுத்த விரும்புகின்றேன்.
1924 இல் இஸ்லாமிய கிலாபத் வீழ்ச்சியுற்றதை அடுத்து சர்வதேச ரீதியில் இஸ்லாமிய கிலாபத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில்எகிப்தில் இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கமும், இந்திய உபகண்டத்தில் ஜமாஅத்தே இஸ்லாமியும் தோற்றம் பெற்றன. முஸ்லிம் சமூகம் பெண்களை சமூக தளத்திலிருந்து ஓரங்கட்டியிருந்த சமயம் இவ்விரு இயக்கங்களும் இஸ்லாமிய எழுச்சி ஒன்றை ஏற்படுத்துவதில் பெண்களின் பங்களிப்பு எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதை அவர்கள் நன்கு விளங்கி வைத்திருந்தனர். மேலும் பெண்ணிய சிந்தனைகளால் இஸ்லாம் களங்கமுறும் நிலையையும் அவதானித்த இவ்விரு இயக்கங்களும் தமது இயக்கங்களின் ஒரு பிரிவாக பெண்கள் பிரிவையும் ஆரம்பித்தார்கள்.
ஒரு பெண்ணிண் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது பணிகள் ஒரு சிறந்த குடும்ப அலகைக் கட்டியெழுப்புவதாக அமைய வேண்டும் என்று எதிர்பார்த்த அவர்கள் அவர்கள் பெண்களின் சமூக பங்களிப்புக்கும் இடம் கொடுத்தார்கள்.
இவ்விரு இயக்கங்களும்பெண்ணிய சிந்தனைகளைப் போலன்றி பெண் சுதந்திரம் என்பதன்யதார்த்த வடிவத்தை மிகச் சரியாக விளங்கியிருந்தார்கள். இவ்விரு இயக்கங்களின் தோற்றத்துடன் முஸ்லிம் உலகெங்கும் ஹிஜாப் தொடர்பான மிகச்சரியான சிந்தனைகள் தோற்றம் பெற்றன. அவற்றின் பெண்கள் பகுதிகள் இன்று குடும்பத்தை ஒழுங்குபடுத்தல், மிகச்சிறந்ததொரு சமூகத்தை உருவாக்குவதற்கான அடிப்படைகளை இடல் என்பவற்றையும் கடந்து முஸ்லிம் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், இஸ்லாத்தின் தூய பெண்ணிய சிந்தனைகளை உலகறிய செய்வதன் மூலம் பெண்ணிய வாதிகளின் வாதங்களிலிருந்து இஸ்லாத்தை பாதுகாத்தல், பெண்களின் சமூக பங்களிப்பின் வரையறைகள், பெண்களின் அரசியற் பிரவேசத்தின் நியாயங்களும்வரையரைகளும் போன்ற சிந்தனைகளையும் முன் வைத்து தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.
எகிப்தில் செயற்பட்ட இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் ஒரு பகுதியாக முஸ்லிம் சகோதரிகள் அமைப்பு 1932 இலேயே தோற்றம் பெற்றது. மக்கா காலத்தில் ஸஹாபா பெண்கள் மார்க்கத்தை பாதுகாப்பதற்காக எத்தகைய தியாகங்களை மேற்கொண்டார்களோ அதற்கு சமனான தியாகங்களை இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கத்தை சேர்ந்த பல பெண்கள் அனுபவித்தனர். அதற்கு மிகச்சிறந்த உதாரணமே ஸைனப் அல் கஸ்ஸாலி. அவர்களது தியாகத்தின் விளைவாக இன்று பரவலான ஓர் இஸ்லாமிய எமுச்சி ஏற்பட்டு வருகின்றது. இந்த எழுச்சியின் சிம்ம சொப்பனங்களாக கருதப்படும் இன்றைய முஸ்லிம் பெண்களில் ஒரு சிலரை அடையாளப்படுத்த விரும்புகின்றேன்.
மர்வா ஷேர்பின் நவீன கால சுமையா (ரழி) அன்ஹா
இவ்வருடம் ஜுலை மாதம் ஜேர்மனியில் ஒரு முஸ்லிம் பெண்ணுக்கு ஏற்பட்ட அகோர நிகழ்வை உலகம் எளிதில் மறந்து விடாது. மர்வா ஷேர்பின் என்றழைக்கபட்ட முஸ்லிம் பெண் அரச நீதிமன்றத்தில் 18 தடவைகள் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யபட்ட நிகழ்வே அது. மர்வா ஷேர்பின் என்றழைக்கபட்ட சாதாரண முஸ்லிம் கர்ப்பிணி பெண் தனது மார்க்கத்தை அடையாளப்படுத்தும் வகையில் ஹிஜாப் அணிந்து சென்ற போது அலெக்ஸ் என்ற இளைஞன் அவரை தீவிரவாதி என்று கூறி மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி இஸ்லாத்தையும் அந்த இஸ்லாமிய பெண்ணையும் தூற்றினான். தனது மார்க்க உரிமையை பாதுகாக்க மர்வா நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார். வழக்கின் முடிவு மர்வாவுக்கு சார்பாக இருந்த போது குற்றவாளி திடீரென பாய்ந்து தனது ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த கத்தியை உறுவி 3 மாத கர்ப்பிணி பெண்ணாண மர்வாவின் வயிற்றில் குத்தி மர்வாவையும் அவரது வயிற்றில் வளர்ந்து வரும் கருவையும் கொலை செய்தான். இந்த நிகழ்வை ஜேர்மன் காவற்துறை வேடிக்கை பார்த்து கொண்டிருந்ததோடு மர்வாவை காப்பாற்ற வந்த அவரது கணவரையும் சுட்டதில் அவர் படுகாயமுற்றார்.
ஐரோப்பிய நாடுகளில் வாழும் முஸ்லிம் பெண்கள் தமது இஸ்லாமிய தனித்துவத்தை பாதுகாப்பதற்காக நாளாந்தம் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கிருக்கின்ற ஆட்சியாளர்களும் முஸ்லிம் பெண்களின் உரிமைக்கெதிராக தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றனர். இவ்விரு முறுகல் நிலைக்கும் மத்தியில் அங்கு மிக வேகமான ஓர் இஸ்லாமிய எழுச்சி ஏற்பட்டு வருகின்றது. அந்த எழுச்சி அங்கு வாழும் மர்வா போன்ற இஸ்லாமிய விழுமியங்களைப் பேணிவரும் பெண்களால் ஏற்பட்டு வரும் எழுச்சியே என்றால் அது ஒரு மிகையான கருத்தாக இருக்காது.
யெமனிலிருந்து உதித்த புதிய நங்கை தவக்குல் கர்மான் உம்மு ஐய்மனாக
உம்மு ஐம்மான் (ரழி) அவர்களை நாம் மறந்திருக்க மாட்டோம். உஹத் யுத்தத்தில் முஸ்லிம்கள் பின் வாங்கி ஓடிக்கொண்டிருந்ததை பார்த்த உம்மு ஐமன் போர்க்களத்திற்கு வந்து ஓடுகின்றவர்களது முகத்தில் மண்ணை வாரி வீசுகின்றார். அவர்களை பார்த்து இந்தா இக் கைராட்டையை நீ எடுத்து கொண்டு வாளை என்னிடம் தாஎன்று கூறி பின் வாங்கி கொண்டிருந்த முஸ்லிம்களை ரோஷமூட்டி தூண்டிக் கொண்டே இருந்தார்.
யெமனில் ஏற்பட்டு வரும் மக்கள் எழுச்சி போராட்டத்தில் தவக்குல் கர்மான் என்ற 32 வயது நிரம்பிய அரபு பெண்ணிண் பங்களிப்பை உம்மு ஐமன் (ரழி) அவர்களின் பங்களிப்புடன் ஒப்பிட்டு பார்ப்பதில் தவறேதும் இருக்காது.
அல் இஸ்லாஹ் என்ற இஸ்லாமிய கட்சியின் அங்கத்தவர்களுள் ஒருவரான தவக்கல் கர்மான் ஸாலிஹின் சர்வாதிகார ஆட்சிக்கெதிராக பல வருடங்களாக சவால் விடுத்து வருகின்றார். ஹிஜாப் அணிந்த நிலையில் இஸ்லாமிய விழுமியங்களைப் பேணி அஹிம்சை வழிப்போராட்டத்தை மேற்கொண்டுள்ள தவக்குல் கர்மான் யெமன் புரட்சியின் தலைவர் என்றழைக்கபடுகின்றார். இவரது அயராத போராட்டம் இவரை நோபல் பரிசு வரை அழைத்து சென்றுள்ளது. நோபல் பரிசு பெறும் முதல் அரபு பெண் தவக்குல் கர்மான் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு நோபல் பரிசு வழங்குவதாக அறிவிக்கபட்டதையடுத்து யெமனியர்களும் உற்சாகமடைந்து தமது போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றியாக அதை கருதி புதியதொரு வீரியத்துடன் போராட்டங்களை மேற்கொண்டு யெமனில் நல்லாட்சி ஏற்பட வழி செய்தனர். தனது இப்பரிசை கர்மான் டியூனீசியா, எகிப்து,யெமன்,லிபியா, சிரியா போன்ற நாடுகளில் நல்லதொரு ஆட்சியை அமைக்கும் நோக்கில் உயிரிழந்துள்ள ஷஹீத்களுக்கு சமர்ப்பித்துள்ளமை முஸ்லிம் பெண்களுக்கு அவரது முன்மாதிரியை பறைசாற்றி நிற்கின்றது
அறேபிய வசந்தம் என்ற பெயரில் கடந்த ஒரு வருட காலமாக அரபு நாடுகளில் நடந்து வரும் மக்கள் எழுச்சிப் போராட்டம் நவீன இஸ்லாமிய எழுச்சிக்கான ஒரு படிக்கல்லே. இன்று நடைபெற்றுவரும் மக்கள் எழுச்சிப் போராட்டங்களின் விளைவாக இன்று டியூனீசியா,மொரோக்கா, எகிப்து போன்ற நாடுகளில் இஸ்லாமிய கட்சிகளின் கை ஓங்கியுள்ளது. இந்த மக்கள் எழுச்சி போராட்டங்களில் தவக்குல் கர்மானை போன்று பல்லாயிரக்கனக்கான பெண்கள் தமது விடுதலைக்காக வீதியில் இறங்கி போராட்டம் நடாத்துகின்றார்கள். எகிப்தில் சர்வாதிகார ஹுஸ்னி முபாரக்கின் ஆட்சியை வீழ்த்திய பெருமை அஸ்மா மஹ்பூத் என்ற 26 வயதுடைய முஸ்லிம் பெண்ணுக்கே உரித்தாகியது. அஸ்மா மஹ்பூதின் உணர்ச்சிகரமான வார்த்தைகளே எகிப்தின் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை தஹ்ரீர் சதுக்கத்திற்கு அழைத்து வந்தது. எனவே இந்த நவீன மக்கள் எழுச்சி போராட்டங்களில் சாதாரண முஸ்லிம் பெண்களின் பங்களிப்பு அளவிட முடியாததாகும்.
இந்த வரிசையில் முஸ்லிம் உலகிற்கு பரிசாக கிடைத்த மற்றொரு ஊடகவியலாளரே யுவோன் ரிட்லி. 2003 இல் இஸ்லாத்தை ஏற்று கொண்ட யுவோன் ஆப்காணிஸ்தானுக்கும், பலஸ்தீனுக்கும் நேரடியாக சென்று அவர்கள் படும் அவலங்களை உலகறிய செய்தார். பிரித்தானியாவில் பிறந்த யுவோன் ரிட்லி மேற்கில் இஸ்லாம் தொடர்பாக முன்வைக்கபடும் குற்றசாட்டுகளுக்கு சர்வதேச ஊடகங்களை பயன்படுத்தி விடையளித்து வருகின்றார். ஈரான் என்ற தொலைக்காட்சி ஊடகத்தில் தற்போதைய ஊடகவியலாளராக உள்ள யுவோன் இஸ்லாத்தை ஏற்க முன் பல முஸ்லிம் சாரா சர்வதேச ஊடகங்களுக்காக வேலை செய்தவர். அரேபிய எழுச்சிப் போராட்டங்கள் குறித்து யுவோன் ஊடகங்களில் தெரிவித்த கருத்துக்கள் சர்வதேச உலகின் கவனத்தை ஈர்த்த விடயங்களாகும்.
இப்படி பெண்களில் ஒரு சாரார் வீதிக்கிறங்கி நேரடியான போராட்டங்களில் ஈடுபட மற்றுமொரு சாரார் ஊடகங்கள் மூலம் கருத்தியல் ரீதியான போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர்.
அன்றைய ஹன்ஸா- இன்று உம்மு முஹம்மத்
உம்மு முஹம்மத் என்பவர் கலாநிதி அப்துல்லாஹ் அஸாமின் மனைவி. பலஸ்தீன், ஆப்கானிஸ்தான் ஜிஹாதிகளில் கலந்து கொண்ட அப்துல்லாஹ் அஸாமை எதிரிகள் குண்டு வைத்துக் கொலை செய்தனர். அவரும் அவரது மகன் முஹம்மத், இப்ராஹீம் ஆகியோரும் பயணம் செய்த கார் ஒன்றிலே அந்த குண்டு பொருத்தப்பட்டிருந்தது. இந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தில் தந்தையும், இரு மகன்களும் ஷஹீதாகின்றார்கள். ஷஹீத்களின் குடும்பத்தினரை தரிசித்து ஆறுதல் சொல்லும் நோக்குடன் அப்துல்லாஹ் அஸாமிற்கு கீழ் பணியாற்றிய முஜாஹித்கள் கவலை தோய்ந்த முகத்துடன் உம்மு முஹம்மதிடம் வருகின்றார்கள். அவர்களது கவலை தோய்ந்த முகத்தை பார்த்த உம்மு முஹம்மத் ஏன் கவலைப்படுகின்றீர்கள். ஒரு அப்துல்லாஹ் அஸாம் நிலத்தில் புதைந்து விட்டால் அவரிலிருந்து எண்ணற்ற அப்துல்லாஹ் அஸாம்கள் புத்துயிர் பெற்று வருவார்கள். இது ஒரு வெற்றியாகும்.எமது ஜிஹாதிய வரலாற்றில் இது ஒரு திருப்புமுனைஎன்று கூறி ஆனந்தக் கண்ணீர் வடித்தார். இந்த உம்மு முஹம்மதின் வார்த்தைகள் அன்று ஹன்ஸா (ரழி) அவர்கள் கூறிய வார்த்தைகளை ஒத்தாகவே அமைந்துள்ளன. காதிஸிய்யா யுத்ததிற்கான அழைப்பு விடுக்கப்பட்ட போது ஹன்ஸா (ரழி) அவர்கள் அன்று தனது நான்கு புதல்வர்களையும் யுத்தத்திற்கு அனுப்பி வைக்கின்றார். நான்கு பேரும் ஷஹீதான செய்தி கேள்விப்படவே ஹன்ஸா ஆனந்த கண்ணீர் வடித்த வண்ணம் என்னுடைய புதல்வர்கள் மூலம் என்னை கண்ணியப்படுத்திய அல்லாஹுவுக்கே எல்லாப்புகழும் என்று கூறுகின்றார்கள்.
உண்மையில் இத்தகைய எண்ணற்ற ஹன்ஸாக்கள் இன்று உம்மு முஹம்மத்களாக பலஸ்தீனிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். தனது பிள்ளை மார்க்கத்திற்காக போராடி ஷஹீதாகுவதன் மூலம் இறைவனிடம் தான் கண்ணியம் பெற வேண்டும் என்பதே ஒவ்வொரு பலஸ்தீன் தாய்மாரின் நோக்கமாக இருந்து வருகின்றது. அந்த இலட்சியத்தை தமது குழந்தைகளுக்கு தாய்ப்பாலுடன் கலந்து ஊட்டிவிடுகின்றார்கள். இத்தகைய பெண்களால் தான் இன்றும் பலஸ்தீன் வல்லரசுகளின் இரும்புப் பிடிகளுக்கு மத்தியிலும் துணிச்சலுடன் எழுந்து நிற்கின்றது. குறிப்பாக பலஸ்தீன், சூடான், டியூனீசியா போன்ற நாடுகளில் நவீன இஸ்லாமிய எழுச்சியில் பெண்களின் பங்களிப்பு ஆரோக்கியமாகவே காணப்படுகின்றன.
இருபத்தியோராம் நூற்றாண்டின் ஆஇஷா
நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரழி) அவர்களை திருமணம் முடித்ததற்கான காரணம் தனது மரணத்தின் பின் குடும்பவாழ்வு மற்றும் பெண்களுடன் தொடர்பான மார்க்க விவகாரங்கள் மறைந்து விடக்கூடாது. இளம் வயதில் காணப்படும் ஆஇஷா (ரழி) அன்ஹா அவர்கள் அந்த சிந்தனைகள் சமூகத்திற்குச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்திலாகும் என்று இஸ்லாமிய அறிஞர்கள் கூறுகின்றார்கள். உண்மையில் ஆஇஷா (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களது மரணத்தின் பின் மிகப்பெரும் ஆசிரியையாக இருந்துள்ளார்கள். ஸஹாபாக்களும், தாபிஈன்களும் தினந்தோறும் ஆயிஷா (ரழி) அவர்களிடம் வந்து மார்க்கத்தை கற்று கொள்வார்கள்.
அந்த ஆயிஷா (ரழி) அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு வளர்ந்த நவீன காலப் பெண்ணே பின்த் ஷாதிஃ என்றழைக்கபடும் ஆயிஷா அப்துர்ரஹ்மான். மிகச்சிறந்த எழுத்தாளராக, சிந்தனையாளராகவும், மொழியியலாளராகவும் இருந்த ஆயிஷா அப்துர்ரஹ்மான் கலாநிதி பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அல்குர்ஆன் விளக்கவுரை துறையில் அல்குர்ஆனை அல்குர்ஆனின் மூலமே விளக்கும் ஒரு புதுமுகப்பார்வையை ஏற்படுத்தியவரே ஆஇஷா அப்துர்ரஹ்மான். ஸஹாபாப் பெண்களின் வரலாறுகள், நவீன இஸ்லாமிய எழுச்சியில் பெண்களின் வகிபாகம் தொடர்பாக ஆஇஷா எண்ணற்ற புத்தகங்களை எழுதியுள்ளார். ஆசிரியராக, பல பல்கழைகழகங்களில் பேராசியராக, உலகின் முன்னோடி பத்திரிகைகளின் ஊடகவியலாளராக என்று பல பதவிகளை ஆஇஷா வகித்துள்ளார். அரபு மொழியின் வளர்ச்சிக்காக ஆஇஷா மேற்கொண்ட முயற்சிகள் எண்ணற்றவை. இதற்காக சர்வதேச அளவில் பைஸல் விருது உட்பட எண்ணற்ற விருதுகளை பெற்றுள்ளார். ஹதீஸ் துறையில் மிக ஆழமான புலமை கொண்டிருந்த ஆஇஷா பெண்களுக்கு அறிவூட்டுவதை தனது முக்கிய குறிக்கோளாக கொண்டிருந்தார். நவீன இஸ்லாமிய எழுச்சியில் பெண்களின் வகிபாகம் தொடர்பாகப் பேசும் இத்தகைய பெண்களின் அறிவுப்பங்களிப்பை எப்படி இஸ்லாமிய உலகம் மறந்து விட முடியும்? இஸ்லாமிய உலகில் அறிவியல் வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செலுத்தியதனூடாக நவீன இஸ்லாமிய எழுச்சியின் பங்காளிகளாக மாறிய பல இஸ்லாமிய பெண் பிரபலங்கள் இங்கு நினைவு கூறப்பட வேண்டும். இக்கட்டுரையின் விரிவஞ்சி அவர்களது வரலாறுகளை சுருக்கமாக முன்வைக்கின்றேன்.
மலேசியாவின் சர்வதேச இஸ்லாமிய பல்கழைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத் துறையில் உதவிப் பேராசிரியராக கடமையாற்றும் கலாநிதி ஸீனத் கௌஸர் தென்னாசியாவில் பேசப்படும் மிகப் பெரும் ஆளுமையாகும். இஸ்லாமிய அரசியல் சிந்தனை, நவீனத்துவம், ஐரோப்பிய தத்துவங்கள், முஸ்லிம் பெண்களின் சமூக பாத்திரம், மேற்கத்தேய ஆய்வுமுறைகள் போன்ற விடயங்களில் ஸீனத் மிகவும் விரிவான ஆய்வுகளை நடாத்தி பல நூல்களை படைத்து முஸ்லிம் உலகிற்கு பெருமை சேர்த்து வருகின்றார்.
டியூனீயாவின் நஹ்ழா இயக்கத்தை ஸ்தாபித்த ராஷித் அல்கன்னூஷி என்றழைக்கபடும் மிகப்பெரிய இஸ்லாமிய ஆளுமையின் மகள் கலாநிதி சுமையா அல் கன்னூஷி முஸ்லிம் சமூகம் கண்டு வரும் மற்றொரு மிகப்பெரும் அறிவாளுமை என்பதில் சந்தேகமில்லை.
என்ற பிரபலமான இஸ்லாமிய வலைப்பின்னலில் தொடர்ச்சியாக பங்காற்றி வரும் சுமையாவின் எழுத்துகளும், பேச்சும் அரசியல் தத்துவம், இடைக்கால வரலாறு, சமகால மத்தியகிழக்கு அரசியல், பெண்ணிய சிந்தனைகளை கட்டுடைத்து தூய இஸ்லாத்தை முன்வைத்தல், ஸியோனிஸத்தை கருத்தியல் ரீதியாக எதிர்த்தல் போன்ற தலைப்புகளிலேயே அமைந்துள்ளது. அரபுலகில் நடந்து வரும் மக்கள் எழுச்சி போராட்டங்கள் தொடர்பாக கலாநிதி சுமையா கார்டியன், அல்ஜஸீரா போன்ற ஊடகங்களில் எழுதிவரும் கருத்துக்கள் மிக முக்கியமானவை.
இன்று நவீன இஸ்லாமிய உலகம் கண்டு வரும் வேறு இருபெரும் ஆளுமைகளே சர்வதேச முஸ்லிம் அறிஞர்களின் தலைவர் யூசுப் அல் கர்ளாவியின் இரு புதல்விகளான கலாநிதி இல்ஹாம் அல் கர்ளாவி, கலாநிதி ஹிஷாம் அல் கர்ளாவி என்போராகும். நவீன இஸ்லாமிய எழுச்சியில் இவர்களது பங்களிப்பு தனியாக ஆய்வுக்கெடுத்து கொள்ள வேண்டிய விடயங்களாகும்.
அதே போன்று 2008 களில் மரணித்த சர்வதேச இஸ்லாமிய அறிஞர் தாஹா ஜாவிர் அலவானியின் மனைவி முனா அபுல் பழ்ல் மற்றுமொரு மிகப்பெரும் பெண் ஆளுமை.
இந்த வகையில் நவீன இஸ்லாமிய எழுச்சிக்கு இன்று ஐரோப்பிய நாடுகளிலும் சரி, அரபுலகிலும் சரி முஸ்லிம் பெண்கள் செய்து வரும் பங்களிப்புக்களை அவதானிக்கும் போது அன்றைய ஸஹாபாப் பெண்களின் பங்களிப்புக்களே கண்முன் தோன்றுகின்றன.
எமது இலங்கைத் திருநாட்டிலும் மார்க்க விடயங்களில் பெண்களின் பங்களிப்பு முன்பிருந்ததை விட ஆரோக்கியமானதாகவே காணப்படுகின்றது. எனினும் அவர்களுல் பெரும்பாலானோர் ஓரிரு சொற்பொழ்வுகளுக்குச் சென்று அவற்றைக் கேட்பதுடன் அவர்களது பங்களிப்பை சுருக்கிக் கொள்கின்றனர். என்னும் சமூகத்தில் வாழும் மற்றொரு பெண் சாரார் சமூகத்தில் கர்தி தொடர்பாக காத்திரமான பங்களிப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர்.
பத்து வருடங்களுக்கு முன்னர் ஆண்கள் மார்க்கத்தைக் கற்பதற்கு நாடு பூராகவும் எண்ணற்ற கலாநிலையங்கள் காணப்பட்டன. ஆனால் அன்று பெண்கள் மார்க்கத்தைக் கற்றுக் கொள்ள எந்ந ஏற்பாடுகளும் காணப்படவில்லை. ஆனால் இன்று அந்த நிலை பரவலாக மாறி வருவதை அவதானிக்க முடியுமாக இருக்கின்றது. தற்போது கல்வி தொடர்பான பெண் சமூகத்தில் காணப்படும் விழிப்புணர்வு ஆண் சமூகத்தில் காணப்படும் விழிப்பணர்வை விட அதிகமாகவே உள்ளன. ஒரு சில இஸ்லாமிய இயக்கங்களின் பெண்கள் அமைப்புக்கள் மிக ஆர்வத்துடன் பெண்கள் சமூகத்திற்கு இஸ்லாத்தின் தூய செய்தியை கொண்டு செல்கின்றனர். சிறார்களுக்கு ஆரம்ப மார்க்க அறிவையும் அல் குர்அனிய அறிவையும் வழங்கும் பல மத்ரஸாக்களின் ஆசிரியர்களாக பெண்களே உள்ளனர். மேலும் பாலர் பாடசாலைகள் முழுமையாக பெண்கள் மூலமே நிர்வகிக்கப்படுகின்றன. பெண்கள் பாடசாலைகள் அதிகரிக்க வேண்டும், ஆண் பெண் கலப்புக் கல்வி தவிர்க்கப்பட வேண்டும் என்ற கருத்து அனைத்து தரப்பினராலும் முன்வைக்கப்படுகின்றன. இவை யாவும் இஸ்லாம் எழுச்சி அடைந்து வருகின்றது என்பதற்குச் சிறந்த உதாரணங்களே.
இந்த அடிப்படைகளிலிருந்தே நாம் எமது சமூகத்தில் பெண்களின் தொடர்பான ஆரோக்கியமான வாதப் பிரதிவாதங்களை முன்னெடுக்க வேண்டும். வீட்டில் இல்லத்தரசிகளாக வாழும் பெண்களுக்கு மார்க்கத்தை கற்பித்து அவர்களை சிறந்த குடும்பப்பெண்களாக, தமது பிள்ளைகளுக்கு இலட்சிய உணர்வை ஊட்டும் தாய்மார்களாக அவர்களை மாற்றும் பெரும் பொறுப்பை பெண்கள் சமூகமே பொறுப்பேற்க வேண்டும். பாலர் பாடசாலைகள், அல் குர்ஆன் மத்ரஸாக்கள், கனிஷ்ட பாடசாலைகள் என்பனவே ஒரு சமூகத்தின் அடிப்படை அத்திவாரங்கள். அந்த அத்திவாரங்களை நிர்மாணிக்கும் பொறுப்பைச் சுமந்தவர்கள் பெண்களே. இந்த அலகுகளை உருவாக்கி அவற்றை மேம்படுத்தும் பொறுப்புக்களையும் பெண்களே செய்ய வேண்டும். இது தவிர கல்வி , எழுத்து , வைத்தியம், மகளிர் விவகாரம், பெண் தலைமைகளை உருவாக்கள், போன்ற துறைகளிலும் பெண்கள் சமூகம் அதிக அக்களை செலுத்த வேண்டும். இலங்கை போன்ற ஒரு சிறுபான்மை நாட்டில் பெண்களின் இத்தகைய முயற்சிகள் சமூகத்தில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது சந்தேகமற்ற விடயமாகும்.-இஸ்லாமிக் வியூ


No comments:

Post a Comment