Friday, August 8, 2014

தட்டுங்கள் திறக்கப்படும்!



அஷ்ஷெய்க் இஸாம் பஹ்ருதீன் (esPkp)

எனது கடன் எப்போது தீரும்?
இந்த நோய் தீராதா?
மகளுக்கு நல்ல மாப்பிள்ளை கிடைப்பதில்லையே?
பிள்ளை நன்றாக படிப்பதில்லையே?

இவை அனைத்தும் மனிதர்கள் அன்றாடம் முனங்கும் வார்த்தைகள்தான். இவை எப்போதும் சமூகத்தில் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன. இந்த வினாக்கள் மனிதனின் தேவைகளின் சிலவைதான். இந்தத் தேவைகளை அடைந்து கொள்வதற்கு இஸ்லாம் காட்டும் மகத்தான, பலமான இலகுவான வழிமுறைதான் பிரார்த்தனை (துஆ) ஆகும்.


சிறந்த செயலை உடையவர் யார் என்பதை சோதிப்பதற்காகவே, மனிதனுக்கு மரணமும், வாழ்வும் கொடுக்கப்பட்டிருக்கின்றது என அல்லாஹ் திருமறையில் குறிப்பிடுகிறான். மனித வாழ்வில் ஏற்படும் சோதனைகள் உலக நியதிகளில் ஒன்றாகக் காணப்படுகிறது. மனிதனாக வாழ வேண்டுமென்றால் சோதனை இன்றி வாழ முடியாது. எந்தத் தேவையுமற்ற அனைத்தையும் படைத்து பரிபாலிக்கும் ஏக இறைவனிடத்தில், பலவீனமான மனிதன் தனது தேவைகளை முறையிடுவதே துஆ எனப்படுகிறது.

பிரார்த்தனை முஃமின்களின் ஆயுதம் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இந்த ஆயுதத்தினால் எமது முன்னோர்கள் பெற்ற வெற்றிகளையும் அடைந்த அடைவுகளையும் அல்குர்ஆனும் ஸுன்னாவும் எமக்குத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.
மனித அறிவையும், காரண காரிய விதியையும் மிகைக்கும் வலிமையை துஆ பெற்றுள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக நபியவர்கள் கூறிய சில நிகழ்வுகளை இங்கு நோக்குவோம்.

  • ஸகரிய்யா (அலை) அவர்கள் மயிர்கள் நரைத்து எலும்புகள் மிகவுமுபலவீனமடைந்திருந்த தனது முதுமைப் பருவத்தில் தனக்கு ஒரு குழந்தையை அருளுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள். அந்த நேரத்தில் அவரது மனைவி மலட்டுத் தன்மையுடைய கிழட்டுப் பெண்ணாக இருந்தார்.


என்றாலும் அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்ட அல்லாஹ், அவருக்கு யஹ்யா என்ற குழந்தையை அருளினான். 45 வயதுக்கு மேற்பட்ட பெண்ணால் குழந்தையை பெற முடியாது என்பது அறிவியல். இதையும் மிகைக்கும் ஆற்றல் பிரார்த்தனைக்கு உண்டு என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ளலாம்.


  • அல்லாஹ் யூனுஸ் (அலை) அவர்களை மீனைக் கொண்டு சோதித்தான். அவரை மூன்று இருள்களுக்குள் சிறை வைத்ததாக அல்லாஹ் குறிப்பிடுகின்றான். அவர் மீன் வயிற்றிலிருந்து வெளியே வருவதற்கு உதவிய ஒரே ஆயுதம் துஆ ஆகும். இந்த நிகழ்வும் துஆவின் பலத்தை பரைசாற்றுகின்றது.


  • நபியவர்கள் பத்ரு யுத்தத்தில் குறைந்த படைப்பலத்தைக் கொண்டு கூடிய படைப்பலத்துடன் மோதி வெற்றி பெற்றார். இதற்கு பின்புலத்தில் இருந்த பலத்த சக்தி நபியவர்களின் பிரார்த்தனையாகும்.


  • மூன்று நபர்கள் மழையின்போது மலையின் குகைக்குள் ஒதுங்குகின்றார்கள். ஒரு பெரிய கல் அந்தக் குகையின் வாயிலை மூடிக் கொள்கின்றது. அவர்களால் அதை அசைக்க முடியவில்லை. மூவரும் அவர்களது வாழ்வில் செய்த மிகச் சிறந்த செயலை முன்வைத்து கல்லை நகர்த்தித் தருமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தித்தனர். பின்னர், கல் நகர்ந்து விடுகின்றது. வெறுமனே துஆவால் அங்கே கல் நகர்கிறது. இந்த சம்பவம் நாம் அறிந்ததே.



மேற்குறிப்பிட்ட நிகழ்வுகளை அல்லாஹ்வும் அவனது தூதரும் எமக்கு எடுத்துச் சொன்னதன் நோக்கம் நாமும் எமது வாழ்வில் ஏற்படுகின்ற அனைத்துப் பிரச்சினைகளையும் அல்லாஹ்விடமே முறையிட்டு அதற்கான தீர்வை பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதேயாகும்.
எனவே, எமது அனைத்துப் பிரச்சினைகளையும் அல்லாஹ்விடமே முறையிடுகின்றவர்களாக நாம் மாற வேண்டும்.


No comments:

Post a Comment