Friday, October 10, 2014

கலாநிதி முஹம்மத் இமாரா – அறிமுகக் குறிப்பு

கலாநிதி முஹம்மத் இமாரா

சுலைஹா மைந்தன்

சமகால இஸ்லாமிய சிந்தனைக்கும் அறிவுத் துறைக்கும் மிகுந்த பங்களிப்பு செய்தவர்களுள் கலாநிதி முஹம்மத் இமாரா முதன்மையானவர். இவரது 140 க்கும் மேற்பட்ட புத்தகங்களும் ஆய்வுகளும் நவீன கால இஸ்லாமிய சிந்தனைத் தளத்தில் புதிய பல தலைப்புக்களையும் விவகாரங்களையும் ஆய்வு செய்துள்ளன. இந்தப் புத்தகங்களையும் ஆய்வுகளையும் ஒருசேரப் பார்க்கும்போது ஒரு தனிமனிதனால் இவ்வளவு ஆய்வுகளைச் செய்ய முடியுமான என பிரமிக்கும் அளவுக்கு அவை செறிவானவை.

1931 இல் எகிப்தின் கஃபருஷ் ஷெய்க் பகுதியில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த கலாநிதி இமாரா, தான் தாயின் வயிற்றில் சிசுவாக இருக்கும் போது, தனது குழந்தை ஆணாகப் பிறந்தால் அதை அறிவுக்காக அர்ப்பணிப்பதாக தனது தந்தை நினைத்திருந்ததாக ஒரு பேட்டியின்போது குறிப்பிட்டிருந்தார். கலாநிதி இமாரா சிறு வயதிலேயே அல்குர்ஆனை மனனமிட்டு தஜ்வீத் கலையிலும் சிறந்து விளங்கினார். பின்னர், தாருல் உலூமில் இஸ்லாமியத் துறையில் கலாநிதிப் பட்டம் வரை கல்வியைத் தொடர்ந்தார்.

சமகால உலகில் இஸ்லாத்தை நடுநிலைமையாக முன்வைக்கும் சிந்தனையாளர் வரிசையில் இடம்பிடிக்கும் கலாநிதி இமாரா எகிப்து அல்அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய ஆய்வுகளுக்கான மன்றம், இஸ்லாமிய சிந்தனைக்கான சர்வதேச நிறுவனம் ஆகியவற்றின் உறுப்பினராகவும் இருக்கின்றார்.


இவர் தனது அறிவை இஸ்லாமியத் துறையோடு மாத்திரம் சுருக்கிக் கொள்ளவில்லை. அதற்கப்பால் சென்று மேற்கத்தேய சிந்தனைகளையும் கருத்துக்களையும் வாசிப்பதிலும் கவனம் செலுத்தினார். எனவேதான் இவரது ஆய்வுகள் மேற்கத்தேய மற்றும் மதச்சார்பின்மை குறித்த மெச்சத்தகு விமர்சனங்களைக் கொண்டிருக்கின்றன.

மிக இளம் வயதிலேயே கலாநிதி இமாரா அரசியலில் ஆர்வம் கொண்டிருந்தார். இதற்கான உந்து சக்தியாக அப்போதைய பலஸ்தீன் ஜிஹாதும் எகிப்தில் நிலவிய ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டமும் திகழ்ந்தன. தான் முதலில் மஸ்ஜித்களில் உரையாற்றும் சந்தர்ப்பத்தை பலஸ்தீன் ஜிஹாதின்போதுதான் பெற்றதாக நினைவுர்வார் முஹம்மத் இமாரா.

தனது அரசியல் ஆர்வம் காரணமாக ஹிஸ்பு மிஸ்ர் அல்ஃபதாத் (பின்னர் இந்தக் கட்சியின் பெயர் ஹிஸ்புல் இஷ்திராகி அத்தீமுக்ராதீ என்று மாற்றப்பட்டது) கட்சியில் இணைந்து கொண்ட இவர், இங்குதான் மேற்கத்தேய சிந்தனைகளை தான் அதிகம் வாசித்ததாகக் குறிப்பிடுகிறார்.
கலாநிதி இமாராவின் ஆய்வுகள் மதச்சார்பின்மை பற்றிய விமர்சனம், மேற்கத்தேயருடனான உரையாடல், ஏனையோர் பற்றிய இஸ்லாத்தின் பார்வை, இஸ்லாமிய எழுச்சித் திட்டம், நவீன இஸ்லாமிய எழுச்சியின் முன்னோடிகள், நவீன சிந்தனைப் போக்குகள் ஆகியன குறித்தே அமைந்திருக்கின்றன. 

இந்த வகையில் ஏனைய மதங்கள் பற்றி அவர் தனது புத்தகமொன்றில் முன்வைக்கும் கருத்து முக்கியமானது. அதாவது, இஸ்லாம் யூதர்களினதும் கிறிஸ்தவர்களினதும் நபிமார்களை ஈமான் கொள்ளுமாறு முஸ்லிம்களை வலியுறுத்துகிறது. அதேபோல் அவர்கள் மீது முஸ்லிம்கள் ஸலவாத்து சொல்லுமாறும் கேட்டுக் கொள்ப்படுகின்றனர். திரிபுகள் இருந்த போதும் தவ்ராத்தும் இன்ஜீலும் இறை வேதங்கள் என்கிறது. அவற்றில் நேர்வழியும் ஒளியும் இருப்பதாகச் சொல்கின்றது. எனவே, இஸ்லாம் ஏனைய மதங்களை அங்கீகரிக்கின்றது. ஆனால் யூதர்களும் கிறிஸ்தவர்களும் எம்மை அங்கீகரிப்பதில்லை என்று சொல்கிறார் முஹம்மத் இமாரா.

நவீன இஸ்லாமிய எழுச்சிக்கும் சிந்தனைக்கும் பங்களிப்புச் செய்த இமாம் ஹஸனுல் பன்னா, ஷஹீத் ஸெய்யித் குத்ப், மௌலானா மௌதூதி ஆகியோர் பற்றிய ஆய்வு நூல்களையும் முஹம்மத் இமாரா எழுதியுள்ளார். ஹுஸ்னி முபாராக்கைப் பதவியிலிருந்து வீழ்த்திய ஜனவரிப் புரட்சியின் பின்னர் அது பற்றி கலாநிதி இமாரா ஒரு சிறிய புத்தகத்தை எழுதியுள்ளார். இதில் இஸ்லாமிய பிக்ஹில் புரட்சி பற்றியுள்ள வரைவிளக்கணங்களை சுருக்கமாக ஆராய்ந்துள்ளார்.
இஸ்லாமிய உம்மத்தின் ஒற்றுமை குறித்து அதிகம் கவனம் செலுத்துகின்ற கலாநிதி இமாரா இஸ்லாமிய உலகைத் துண்டாடும் நோக்கில் இஸ்லாமிய உலகில் சில தீய சிந்தனைகள் சுற்றிவருவதாகச் சொல்கிறார். குழுவாதம், இனவாதம், தேசியவாதம் போன்ற போக்குகள் இஸ்லாமிய உலகைத் துண்டாடுவதை நோக்காகக் கொண்டிருப்பதாக கலாநிதி இமாரா கருதுகிறார்.

சமகால சூழலில் இஸ்லாத்தை சரியாகப் புரிந்து கொள்வதற்கும் எமது சூழலுக்கான குறிப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்கும் கலாநிதி இமாராவின் புத்தகங்கள் மிகவும் பொருத்தமானவை. இவரது ஒரு சில புத்தகங்கள் தமிழில் வந்திருக்கின்றன. இவரது ஆய்வுகளின் சுருக்கங்களேனும் தமிழில் மிக அவசரமாக வரவேண்டிய தேவை இருக்கின்றது.

கலாநிதி இமாராவின் புத்தகங்கள் துருக்கி, உர்தூ, ஆங்கிலம், ரஷ்யா, ஜேர்மன் போன்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதோடு, பல விருதுகளையும் பெற்றிருக்கின்றன. அவரது எழுத்துக்கள் தர்க்க ரீதியாக ஆழமான உள்ளடக்கத்தோடு விமர்சனக் கண்ணோட்டத்தில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment