Thursday, October 9, 2014

'இரும்பு' என்ற பெயரில் ஒரு ஸூறாவையே பெற்றிருக்கின்ற சமூகம் இரும்புக் கைத்தொழிலைக் கற்றுக் கொள்ளவில்லையே!


கலாநிதி யூஸுப் அல்கர்ளாவி
தமிழில்: சுலைஹா மைந்தன்

சிலர் இஸ்லாமிய எழுச்சி தொழினுட்பத்துக்கு முரணானது, அது தொழினுட்பம் குறித்து அஞ்சுகின்றது, அது விஞ்ஞானம் குறித்து பயப்படுகின்றது என்றவாறு கருதுகின்றனர். இது பிழையான கருத்தாகும். இஸ்லாத்தின் அழைப்பாளர்களாகிய நாம் இஸ்லாமிய எழுச்சியைப் பலப்படுத்தவும் அதனை வழிப்படுத்தவுமே முயற்சிக்கின்றோம். நாம் விஞ்ஞானத்தை  வரவேற்கின்றோம். அதன்பால் மக்களை அழைக்கின்றோம்.

அறிவியல் முன்னேற்றத்தின் அனைத்துத் துறைகளினதும் கடிவாளத்தை கையில் எடுக்காதவரை எமது நாடுகளின் இருப்பை உறுதிப்படுத்த முடியாது என்று நாம் உறுதியாக நம்புகிறோம். இதனை ஒரு பர்ழாகவும் கருதுகிறோம்.

முஸ்லிம்களுக்கு தமது உலக விவகாரங்களுக்கு அவசியமான மருத்துவம், பொறியியல், இரசாயனவியல், கணிதம் ஆகியவை பர்ழ் கிபாயா என்று உலமாக்கள் சொல்லியுள்ளார்கள். அதாவது, இஸ்லாமிய சமூகத்தின் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவு அறிஞர்களும் நிபுணர்களும் இருந்தால் முஸ்லிம் சமூகம் பர்ழ் கிபாயாவிலிருந்து நீங்கி விடும். அப்படியில்லாது, அனைத்துத் துறைகளிலும் போதுமானளவு நிபுணர்கள் இல்லாது போனால் முழு முஸ்லிம் சமூகமும் தவறிழைத்ததாகக் கொள்ளப்படும்.


இளைஞர்களே! பொறியில், மருத்துவம், பௌதிகவியல், இரசாயனவியல், இலத்திரனியல் போன்ற துறைகளில் நுழைந்து அவற்றில் ஆழ்ந்த அறிவைப் பெறுங்கள். அதனைக் கச்சிதமாகக் செய்யுங்கள். அது ஒரு இபாதத், அது ஒரு ஜிஹாத்.

நாம் தற்போது இரண்டாம் கைத் தொழில் யுகத்தில் வாழ்கிறோம். முதலாம் கைத் தொழில் யுகத்தில் மனிதனின் உடல் களைப்பைக் குறைக்கும் உபகரணங்கள் உற்பத்தி செய்யப்பட்டன.

இரண்டாம் கைத்தொழில் யுகத்தில் மனிதனின் சிந்தனை மற்றும் மூளையின் களைப்பைக் குறைக்கும் உபகரணங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மனிதன் செய்யும் பல மில்லியன் எண்களைக் கொண்ட கணக்குகளை சில செக்கன்களில் கம்பியூட்டர் செய்து முடிக்கின்ற நிலை இன்று.

நாம் இன்றும் பின்னடைந்தவர்களாகவே இருக்கின்றோம். இந்தப் போராட்டத்தில் எமது முயற்சிகளையும் நம்பிக்கையையும் நுழைத்தாலேயன்றி எமக்கும் அபிவிருத்தியடைந்த நாடுகளுக்குமிடையிலான இடைவெளியைக் குறைக்க முடியாது.

சக்தியைத் திரட்டவும் ஒரு சாதாரண மனிதன் செலவிடும் முயற்சியை விட பன்மடங்கு முயற்சியை செலவிடும் நிலையை ஒரு முஸ்லிமுக்கு ஏற்படுத்தவும் நம்பிக்கை என்ற சாதனத்தினாலேயே முடியும். நாம் பல மடங்கு முயற்சி செய்யும் போதுதான் இந்தப் பயணத்தில் முந்திச் செல்பவர்களை அடைந்து கொள்ள முடியும், அவர்களைத் தாண்டவும் முடியும். இதனையே இந்த அல்குர்ஆன் வசனம் எமக்குச் சொல்கின்றது.

'அவர்களை எதிர்ப்பதற்காக உங்கள் முடியுமான பலத்தைத் திரட்டுங்கள்.'

இரும்பு என்ற பெயரில் ஒரு ஸூறாவையே பெற்றிருக்கின்ற சமூகம் இரும்புக் கைத்தொழிலைக் கற்றுக் கொள்ளவில்லையே!

No comments:

Post a Comment