Sunday, October 5, 2014

ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடுவது எப்படி?


அஷ்ஷெய்க் அகார் முஹம்மத் (நளீமி)

அல்லாஹுத் தஆலா முஃமின்களாகிய எமக்கு இரண்டு பெருநாட்களைத் தந்துள்ளான். ஒன்று ஈதுல் அழ்ஹா. அடுத்தது ஈதுல் பித்ர். இவ்விரு பெருநாட்களையும் முக்கியமான இரண்டு வணக்கங்களைத் தொடர்ந்துதான் அல்லாஹ் எமக்குத் தந்திருக்கிறான்.

ரமழானுடைய நோன்பைத் தொடர்ந்து ஈதுல் பித்ர் பெருநாளையும் ஹஜ் கடமையை அடுத்து ஈதுல் அழ்ஹா எனும் தியாகத்திருநாளையும் நாம் கொண்டாடுகிறோம். மாத்திரமல்ல, ஈகைத்திருநாளைக் கூட தக்பீரோடு ஆரம்பிக்கிறNhம். தக்பீரோடு நிறைவு செய்கிறNhம். இடையிலே மீண்டும் தொழுகையிலும் மற்றும் பல வணக்க வழிபாடுகளிலும் ஈடுபடுகிறோம்.

பெருநாள் தினத்தை மறுமையோடு ஒப்பிட முடியும். மறுமை நாளில் மனிதர்கள் எவ்வாறு இருப்பார்கள் என்பதனை அல்குர்ஆன் நமக்குச் சொல்லித் தருகிறது.

“சில முகங்கள் அந்நாளிலே மகிழ்ச்சியாக இருக்கும் (சிரித்துக் கொண்டிருக்கும்). அந்நாளில் மற்றும் சில முகங்கள் புழுதி படிந்த நிலையில் இருக்கும். முகங்களிலே இருள் சூழ்ந்திருக்கும்.”


பெருநாள் தினங்களிலும் சில முகங்கள் இப்படித்தான் இருக்கும். துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களிலும் நோன்பு நோற்று, நற்கருமங்கள் செய்து, இபாதத்தில் ஈடுபட்டவர்களுக்கு இந்த ஹஜ்ஜுப் பெருநாள் மகிழ்சிகரமானதாக இருக்கும். நற்கருமங்கள் செய்தவர்கள் இந்நாளில் மலர்ந்த முகத்தோடு இருப்பார்கள். அவர்களின் இன்முகங்களில் புன்னகை பூத்திருக்கும்.

மறுபக்கம், இந்த வருடத்தைப் பாழ்படுத்தியவர்கள், அல்லாஹ்வை மறந்து பாவகாரியங்களில் ஈடுபட்டவர்கள், இந்த துல்ஹஜ் மாதத்தை வீணாகக் கழித்தவர்கள், ஹஜ் கடமையாக இருந்தும் அதை நிறைவேற்றாதவர்கள் இந்த ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் இருள் சூழ்ந்த முகத்தோடு இருப்பார்கள். அவர்களின் முகத்தில் மகிழ்ச்சியோ சந்தோசமோ தென்படாது.

எனவே, பெருநாள் தினம் என்பது மறுமை நாளுக்கு ஒப்பான ஒரு நாள் என்றால் அது மிகையாகாது.

பெருநாள் தினத்தை ஆடிப் பாடி கூத்தாடி, கும்மாளமிட்டு வீண் விளையாட்டுகளில் கழிக்கக் கூடாது. அது தக்பீரோடு ஆரம்பிக்கிறது. தொழுகையோடு துவங்குகிறது. தக்பீரோடு நிறைவு பெறுகிறது. நல்லமல்கள் புரியக் கூடிய ஒரு நன்னாள் அது. ஈதுல் அழ்ஹா தியாகத் திருநாளை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் காட்டித் தந்த முறைப் பிரகாரம் கொண்டாட வேண்டும்.

பெருநாள் தினத்தில் விடேசமாக பெருநாளுக்காக குளிப்பது ஒரு முக்கியமான ஸுன்னா. நறுமணம் பூசிக் கொள்வதும் இருக்கின்ற ஆடைகளுள் அழகான ஆடைகளை அணிந்து கொள்வதும் பெருநாள் தினத்திலே நாம் கடைபிடிக்க வேண்டிய ஸுன்னாக்கள். ஆடை அணிகலன்கள் புத்தம் புதியதாக இருக்க வேண்டும் என்பதில்லை. சிறந்த ஆடையாக இருந்தால் போதுமானது.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பேரர் ஹஸன் (ரழியல்லாஹு அன்ஹு)  அவர்கள்,”பெருநாள் தினத்திலே எம்மிடம் இருக்கக்கூடிய ஆடைகளுள்  மிகச் சிறந்த ஆடையை நாம் அணிய வேண்டும் எம்மிடமிருக்கும் நறுமணங்களுள் மிக உயர்ந்த நறுமணத்தைப் பூசிக் கொள்ள வேண்டும் எம்மிடமுள்ள கால்நடைகளுள் மிகவும் பெறுமதியான கால்நடையை உழ்ஹிய்யாவாக அறுத்துப் பலியிடவேண்டும் என்று ரஸூலுல்லாஹி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எமக்குப் பணித்திருக்கின்றார்கள்” எனச்  சொல்கிறார்கள்.

இமாம் இப்னுல் கையிம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் சொல்கிறார்கள். “நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இரண்டு பெருநாட்களின்போதும் தன்னிடம் இருக்கின்ற ஆடைகளுள் மிக அழகான ஆடையைத் தெரிவு செய்து அணிந்து கொள்வார்கள். அவர்களிடம் ஒரு விஷேடமான ஆடை இருந்தது. குறிப்பாக அந்த ஆடையை ஈதுல் பித்ர் பெருநாள் தினத்திலும் ஈதுல் அழ்ஹா பெருநாள் தினத்திலும் அவர்கள் அணிவார்கள்.”

ஈதுல் பித்ர்- நோன்புப் பெரநாளைப் பொறுத்தவரை காலையில் பெருநாள் தொழுகைக்குச் செல்வதற்கு முன்னர் காலை உணவை உட்கொள்வது நபிவழியாகும். ஈதுல் அழ்ஹா- ஹஜ்ஜுப் பெருநாளைப் பொறுத்தவரை நேரகாலத்தோடு பள்ளிவாசலுக்குச் சென்று பெருநாள் தொழுகையை நிறைவேற்றி விட்டு வீடு திரும்பியதன் பின்னரே காலை உணவை உட்கொள்ள வேண்டும். அதுதான் ஸுன்னா. இப்படித்தான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எமக்கு வழிகாட்டியிருக்கிறார்கள்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நோன்புப் பெருநாளில் காலை உணவை அருந்திய பின்னரே தொழுகைக்குச் செல்வார்கள். ஆனால், ஹஜ்ஜுப் பெருநாளில் தொழுகையை நிறைவேற்றி விட்டு வீடு வந்துதான் காலை உணவை சாப்பிடுவார்கள் என்று அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

பெருநாள் தொழகையை பள்ளிவாசலில் அமைத்துக் கொள்வதற்கு மார்க்கத்தில் எந்த ஆட்சேபனையும் கிடையாது. அது அனுமதிக்கப்பட்டது. ஆனால்,இரு பெருநாள் தொழுகைகளை பொதுவான ஒரு மைதானத்தில் அல்லது ஒரு திறந்த வெளியில் (முஸல்லா) அமைத்துக் கொள்வது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடைய முக்கியமான ஒரு  சுன்னத்தாகும்.

மழை போன்ற நியாயமான ஒரு காரணத்துக்காக மாத்திரம் பெருநாள் தொழுகையை பள்ளிவாசலில் நடத்தலாம். அப்படி நியாயமான காரணங்கள் இல்லாத நிலையிலும் பள்ளிவாசல்களில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டல்ல என்பதையும் கவனத்திற் கொள்ள வேண்டும்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தன்னுடைய வாழ்நாளில் மழை காரணமாக ஒரே ஒரு பெருநாள் தொழுகைகயைத்தான் பள்ளிவாசலில் நிறைவேற்றியிருக்கிறார்கள். ஏனைய பெருநாள் தொழுகைகளையெல்லாம் அவர்கள் ஒரு பொதுவான மைதானத்தில் அல்லது திறந்த வெளியில்தான் தொழுகை நடத்தியிருக்கிறார்கள் என்ற உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

திறந்த இடத்திலே பெருநாள் தொழுகையை அமைத்துக் கொள்வதோடு ஆண்கள் மாத்திரமன்றி, பெண்கள், சிறுவர்கள், வயோதிபர்கள் அனைவரும் அந்த மைதானத்துக்கு செல்வதும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடைய வழிமுறையைச் சார்ந்ததாகும்.

உம்மு அதிய்யா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் சொல்கிறார்கள். “பெருநாள் தினத்தில் கன்னிப் பெண்கள் உட்பட மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள்கூட தொழுகை நடைபெறும் இடத்துக்குச் செல்ல வேண்டும் என்று நபியவர்கள் எங்களைப் பணித்தார்கள். முஸ்லிம்களின் பிரார்த்தனையை, தொழுகையை எல்லோரும் கண்டுகழிக்க வேண்டும். மாதவிடாய் உடன் இருக்கின்ற பெண்கள் மாத்திரம் அந்த மைதானத்திலே ஒரு பக்கமாக ஒதுங்கி இருக்க வேண்டும் என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எமக்குப் பணித்திருக்கிறார்கள்” என உம்மு அதிய்யா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் சொல்கிறார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹு முஸ்லிம்)

“நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தன்னுடைய மனைவிமார் உட்பட தனது பெண் பிள்ளைகள் எல்லேரையும் பெருநாள் தொழுகைக்காக மைதானத்துக்கு அழைத்துச் செல்வார்கள்” என்று இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸும் குறிப்பிடத்தக்கது.

பெருநாள் தினத்தில் கடைபிடிக்க வேண்டிய மற்றுமொரு முக்கியமான ஸுன்னா இருக்கிறது. அதுதான் ஒரு பாதையால் தொழுகைக்குச் சென்று மற்றnhரு பதையால் வீடு திரும்புதலாகும்.

ஜாபிர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள். “நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பெருநாள் தொழுகைக்காகச் செல்கின்றபோது ஒரு பாதையால் செல்வார்கள். திரும்புகின்றபோது மற்றnhரு வழியால் திறும்புவார்கள்.” (ஸஹீஹு முஸ்லிம்)

தொழுகை நடைபெறும் இடத்துக்குச் செல்வதற்கு ஒரு பாதை மாத்திரமே இருக்கின்றது அல்லது வேறு பாதையினால் திரும்புவதில் ஏதும் சிரமங்கள் இருக்கின்றது என அறிந்தால் சென்ற பாதையினூடாகவே திரும்பி வருவதற்கு மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை என்பதனையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆயுளில் மிகவும் அரிதாகக்  கிடைக்கக் கூடிய இத்தகைய சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி இப்படியான ஸுன்னத்துக்களை முடிந்தவரை நிறைவேற்றுவதற்கு  முயற்சிக்க வேண்டும்.

பெருநாள் தொழுகையுடன் தொடர்புடைய மிக முக்கியமான மற்றுமொரு ஸுன்னா பெருநாள் தொழுகையை குறித்த நேரத்தில் தொழுவது. ஆனால், இன்று பெருநாள் தொழுகை முடியுமானவரை தாமதப்படுத்தப்படுகிறது. இது நபியவர்களின் ஸுன்னாவுக்கு மாற்றமானது. அதிலும் குறிப்பாக, ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாளுக்குரிய தொழுகையை முடியுமான வரை நேரகாலத்தோடு தொழுவது மிக முக்கியமான ஒரு ஸுன்னா. ஜுன்துப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

“இரண்டு ஈட்டியின் அளவு உயரத்திற்கு சூரியன் உயரும்போது ஈதுல் பித்ர் பெருநாள் தொழுகையையும் சூரியன் ஓர் ஈட்டின் அளவுக்கு உயரும்போது ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையையும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்  நிறைவேற்றுவார்கள்.” ஆதாரம்: அஹ்மத்

“முடியுமான வரை ஈதுல் அழ்ஹா பெருநாள் தொழுகையை நேரகாலத்தோடு நிறைவேற்றுவது ஸுன்னத்தாகும்” என இமாம் இப்னு குதாமா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் சொல்கிறார்கள்.

அவ்வாறு ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை நேரகாலத்தோடு நிறைவேற்றும்போது உழ்ஹிய்யாவை நேரகாலத்தோடு கொடுப்பதற்கும் உழ்ஹிய்யாவை நிறைவேற்றுவதற்கான கால எல்லையை அதிகரித்துக் கொள்ளவும் முடியும். நோன்புப் பெருநாள் தொழுகைக்கு முன்பதாக ஸகாதுல் பித்ர் கொடுக்கப்பட வேண்டும் என்பதால் ஈதுல் பித்ர் தொழுகையை சற்று தாமதிப்பதில் தவறில்லை என்று சில இஸ்லாமிய அறிஞர்கள் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பெருநாள் தொழுகை கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டிய, வலியுறுத்தப்பட்ட ஒரு ஸுன்னா (ஸுன்னா முஅக்கதா). பெருநாள் தொழுகையை நிறைவேற்றும் சிலர் பெருநாள் குத்பா பிரசங்கத்தை கேட்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. பெருநாள் தொழுகை ஒரு ஸுன்னா முஅக்கதாவாக இருப்பது போலவே பெருநாள் குத்பாவைக் கேட்பதும் ஒரு ஸுன்னா முஅக்கதாவே என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மனிதர்களின் இயல்பை, சுபாவத்தை அறிந்து வைத்துள்ள இஸ்லாம், பெருநாள் தினத்தில் மகிழ்சியை வெளிப்படுத்தும் வகையில் ஹலாலான ஆகுமான விளையாட்டுக்களில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கியிருக்கிறது.

ஆஇஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் சொல்கிறார்கள். “பெருநாள் தினத்தில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பார்த்திருக்க அபீசீனியா அடிமைகள் ஆடிப்பாடி மகிழ்ந்தார்கள். நான் அந்தக் காட்சியை நபியவர்களின் புஜத்துக்குப் பின்னால் இருந்து எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன். நான் அந்தக் காட்சியைக் கண்டு கழிக்க வேண்டுமென்பதற்காக நபியவர்கள் குனிந்து தனது முதுகைப் பணித்தார்கள். நான் மிகவும் மகிழ்ச்சியாக அந்த அபீசீனியா அடிமைகளுடைய ஆடல், பாடல்களைக் கேட்டு ரசித்தேன். மனநிறைவு அடைந்ததைத் தொடர்ந்து நான் வீட்டுக்குள்ளே சென்று விட்டேன்.”

இந்த ஹதீஸ் ஸஹீஹுல் புஹாரி, ஸஹீஹு முஸ்லிமிலே பதிவாகி இருக்கிறது. இந்த வகையில் எமது குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள் இந்தப் பெருநாள் தினத்தை மகிழ்யச்சியாகக் கொண்டாடும் வகையில் ஆகுமான, அனுமதிக்கப்பட்ட விளையாட்டுக்களை, கலை நிகழ்ச்சிகளை ஷரீஆ வரம்புகளைப் பேணி ஒழுங்கு செய்ய வேண்டிய தேவையும் அவசியமும் இருக்கின்றது. இது மனிதனின் அழகியல் தேவை. இது நிறைவேற்றப்படாதபோது அவர்கள் வீண் விளையாட்டுக்கள், கேளிக்கைகளின்பால் திசை திரும்புவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுகிறது.

ஹராத்தை நாட வேண்டிய அவசியம் இல்லாத அளவுக்கு அல்லாஹ் அனைத்தையும் ஹலாலாக்கியிருப்பது இந்த மார்க்கத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று. எந்த ஒரு விடயத்தையும் ஹராமான வழிமுறையில் அனுபவிக்க வேண்டிய தேவை இல்லை. அதற்கான மாற்றீடு இஸ்லாத்தில் இருக்கிறது.
அவற்றை நாம் கண்டறிய வேண்டும். இந்த வகையில் மனிதனிடம் இயல்பாகக் குடிகொண்டிருக்கும் இந்த கலை உணர்வுக்கு மதிப்பளித்து ரீஆவின் வரையறைக்குள் நின்று இளைஞர்கள், யுவதிகள், சிறுவர்களுக்கான நல்ல கலை நிகழ்ச்சிகளை, போட்டிகளை ஒழுங்கு செய்ய வேண்டிய கடப்பாடு சமூகத் தலைவர்களுக்குண்டு என்பதனை நாம் நினைவிற் கொள்ள வேண்டும்.

பெருநாள் தினத்தல் அதிகமதிகம் அல்லாஹ்வைப் புகழ்ந்து தக்பீர் சொhல் வேண்டும். அதுவும் முக்கிய ஸுன்னாக்களில் ஒன்று. ஈதுல் அழ்ஹாவைப் பொறுத்தவரை பெருநாள் தினம் தொடக்கம் அய்யாமுத் தஷ்ரீக்குடைய நாட்கள் முடியும் வரை தக்பீர் சொல்வது ஸுன்னா. அந்த வகையில் தக்பீரை அதிகமதிகம் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறNhம்.

“ஈத் பெருநாட்களை அல்லாஹ்வைப் புகழ்ந்தும் தக்பீர் கூறியும் அழகுபடுத்துங்கள்” என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

பெருநாள் தினத்தில் நிறைவேற்ற வேண்டிய மற்றுமொரு ஸுன்னா இருக்கின்றது. அதுதான் வாழ்த்துத் தெரிவிப்பது. பெருநாள் தினத்தில் நபித் தோழர்கள் சந்தித்துக் கொண்டால் “தகப்பலல்லாஹு மின்னா வ மின்கும்” (அல்லாஹ் உங்களையும் என்னையும் பொருந்திக் கொள்வானாக) என்று வாழ்த்துக் கூறியவர்களாக முஸாபஹா, முஆனகா செய்து கொள்வார்கள். இது வெறுமனே ஒரு வாழ்த்து மட்டுமல்ல, ஓர் உயர்த பிரார்த்தனையும்கூட.

ஈதுல் அழ்ஹாவைப் பொறுத்தவரை உழ்ஹிய்யா வலியுறுத்தப்பட்ட ஒரு ஸுன்னா (ஸுன்னா முஅக்கதா) என்ற வகையில் இந்தக் கடயையையும் நாம் கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும். உழ்ஹிய்யா கொடுப்பதினூடாக இரண்டு நோக்கங்கள் நிறைவேற்றப்படுகின்றன. ஒன்று, இப்றாஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுடைய தியாகத்தை, அர்ப்பணத்தை நினைகூர்தல். மற்றையது பெருநாள் தினத்தில் ஏழைகள், தேவையுடையவர்களுக்கு மாமிசத்தைக் கொடுத்து அவர்களுடைய தேவையை நிறைவேற்றுதல்.

இலங்கை பல்லின சமூகத்தவர்கள் வாழும் ஒரு நாடு. பிற சமயத்தவர்களுடைய உணர்வுகளை மதிப்பது எமது கடமை. இது இஸ்லாம் எம்மிடம் வேண்டிநிற்கும் ஓர் அடிப்படைப் பண்பு. இலங்கையில் பெரும்பான்மையினராக வாழ்கின்ற பௌத்தர்கள் பசு வதையை விரும்பாதவர்கள். அதனை வெறுப்பவர்கள். அவர்கள் பசு மாட்டை புனிதமாக மதிக்கின்ற நம்பிக்கை கொண்டவர்கள். எனவே, நாம் மாடு அறுத்து குர்பான் கொடுக்கின்றபோது அவர்களுடைய மத உணர்வுகள் புண்படுகின்ற அளவுக்கு நடந்து கொள்ளக் கூடாது. இலங்கையில் அரசாங்க விடுமுறை தினத்தில் (போயா தினம்) இறைச்சிக் கடைகள் மூடப்படவேண்டும் என்ற சட்டம் அமுலிலிருக்கின்றது.

அத்தகைய ஒரு தினத்தில் ஹஜ் பெருநாள் வருமாக இருந்தால் அத்தினத்தில் மாடு அறுப்பதைத் தவிர்த்து அல்லாஹுத் தஆலா வழங்கியிருக்கின்ற மூன்று நாட்களுக்குள் உழ்ஹிய்யாவை நிரப்பமாக நிறைவேற்றிக் கொள்வதற்கு முயற்சிக்க வேண்டும்.

பெருநாள் தினத்தில் எமது சகோதர-சகோதரிகள், இனபந்துக்கள், அன்பர்களை, நண்பர்கள், உற்றார் உறவினரை அரவணைப்பது, ஆதரிப்பது, அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவது அவர்களுடனான உறவைப் பலப்பலப்படுத்திக் கொள்வது, பகைமை இருந்தால் அதனை அல்லாஹ்வுக்காக மன்னித்து உறவைப் புதுப்பித்துக் கொள்வது...போன்ற உன்னத கூலிகளைப் பெற்றுத் தரக்கூடிய அம்சங்களில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, எமது பெற்றNhர், சகோதர, சகோதரிகள் உட்பட இரத்த உறவினர்களுடனான உறவுகளை பலப்படுத்திக் கொள்ள ஈதுல் அழ்ஹா பெருநாள் உதவும்.

“குடும்ப உறவை முறித்துக் கொண்டவன் சுவனம்  நுளைழய மாட்டான்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

மூன்று நாட்களுக்கு அதிகமாக ஒருவர் தனது சகோதரனை பகைத்துக் கொண்டிருப்பது ஆகுமானதல்ல (ஹராம்) என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கடுமையாக எச்சரித்திருக்கிறார்கள்.

மனிதர்கள் தவறிழைக்கக் கூடியவர்கள் பலவீனமானவர்கள் என்பதனால் நாம் எமது வீட்டில், காரியாலயத்தில், ஊரில் சக மனிதர்களோடு உறவாடுகின்றபோது பகைமை ஏற்பட்டிருக்கும் சிலரோடு அதிருப்தியடைந்திருப்போம் மற்றும் சிலரோடு கோபித்துக் கொண்டிருப்போம். இவற்றையெல்லாம் போக்கிக் கொள்வதற்கான அரியதொரு சந்தர்ப்பமாக இத்தினத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒரு மனிதன் உலகில் இரண்டு விடயங்களை அடிப்படைத் தேவையாகக் கருதுகிறான். ஒன்று, நீண்ட ஆயுள் கிடைக்கவேண்டும் என விரும்புவது. இரண்டாவது தன்னுடைய வாழ்வாதாரத்தில் பரகத் கிடைக்க வேண்டும் என்பது.
“யார் தனது ஆயுள் அதிகரிக்க வேண்டும் என, அவருடைய வாழ்வாதாரத்தில் பரகத் அமைய வேண்டும் என விரும்புகிறரோ அவர் தனது இனபந்துக்களை சேர்ந்து நடக்கட்டும்” என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சொன்னார்கள்.

இரத்த உறவைப் பேணி வாழ்ந்தால், தன் குடும்பத்தினருடன் நெருக்கமான உறவைப் பேணி வாழ்ந்தால் சுகமாக வாழலாம், நீண்ட ஆயுளைப் பெறலாம், மாதாந்த செலவினத்தைக் கட்டுப்படுத்தி மிச்சம் பிடித்துக் கொள்ளலாம் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், இதன் மூலம் அவர்களது வாழ்வாதாரத்தில் விஸ்தீரணம் ஏற்படப் போவதில்லை என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சொல்லிச் சென்றிருக்கிறார்கள்.

இனபந்துக்களுடனான உறவைத் துண்டித்து, குறைத்துக் கொண்டு அவர்களை அனுசரிக்காமல், அரவணைக்காமல் சுயநலமிகளாக வாழ்கின்ற மனிதர்கள் அவர்கள் நினைத்தது போன்று ஆரோக்கியமாக வாழ முடியாது அவர்களது நாளாந்த செலவினம் குறைவடையாது. அதற்கு மாற்றமான விளைவையே அவர்கள் அனுபவிப்பார்கள். இதனை நாம் இன்று நடைமுறையில் காண்கின்றோம்.

இந்த மார்க்கம் ஓர் அற்புதமான மார்க்கம். எமக்குத் தேவையான அத்தனை வழிகாட்டல்களும்  இந்த மார்க்கத்தில் உண்டு. மனிதன் இந்த உலகிர் மகிழ்ச்சியாக வாழ நிறைவோடு, நிம்மதியாக வாழ, ஆரோக்கியதுடன் நீண்ட ஆயுளைப் பெற்று வாழ்வதற்கான அற்புதமான வழிகாட்டல்களை இந்த மார்க்கம் வழங்கியிருக்கின்றது.

அத்தகைய வழிகாட்டலில் ஒன்றுதான், எமது உற்றார் உறவினர்களை, இரத்த பந்தங்களை நாம் எந்தளவு தூரம் சேர்ந்து நடக்கிறNhமோ அந்தளவுக்கு அல்லாஹுத் தஆலா எமது வாழ்வாதாரத்தில், ஆயுளில் விஸ்தீரணத்தை ஏற்படுத்துவான். இது ரஸூலுல்லாஹி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாக்கு என்பதனை நாம் மறந்து விடக் கூடாது.

பெருநாள் தினத்தில் அண்டை அயலவர்களுக்கு நாம் அதிகம் உபகாரம் செய்ய வேண்டும். அவர்கள் முஸ்லிம்களாகவோ முஸ்லிமல்லாதவர்களாகவோ இருக்கலாம். அவர்களை அனுசரிக்கின்ற, அரவணைக்கின்ற ஒரு நாளாக பெருநாள் தினத்தை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும். அவர்களைச் சந்தித்தல், வாழ்த்துத் தெரிவித்தல், அவர்களுக்கு உணவுப் பண்டங்களைக் கொடுத்தனுப்புதல் போன்ற அவர்களை மகிழ்வூட்டுகின்ற சந்தர்ப்பமாகவும் இந்த பெருநாள் தினத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவற்றக்கூடாக சாந்தியும் சமாதானமும் ஐக்கியமும் நிலவக்கூடிய ஒரு கிராமத்தை, ஒரு நகரத்தை, ஒரு நாட்டை, ஓர் உலகத்தைக் கட்டியெழுப்பவே இந்த மார்க்கம் விரும்புகிறது. இந்த மார்க்கத்தின் பிரதான நோக்கமே சாந்தி, சமாதானத்தை, அமைதியை இந்த உலகில் நிலைநிறுத்துவதுதான்.

இந்த மார்க்கம் ஒவ்வோர் அமலுக்கூடாகவும் மனிதர்களுக்கு மத்தியில் ஒற்றுமையை, ஐக்கியத்தைக் கட்டியெழுப்ப விரும்புகிறது. பெருநாள் தினம் இந்த ஐக்கியத்தையும் ஒற்றுமையையும் பிரகடனப்படுத்துவதற்கான நல்லதொரு சந்தர்ப்பம். குறிப்பாக, இந்த பெருநாள் தினத்தைத் தொடர்ந்து நாம் அந்நிய மக்களுடன் சந்திப்புக்களை ஏற்படுத்திக் கொள்ளலாம். அவற்றினூடாக இந்த மார்க்கத்தின் செய்தியை எத்திவைக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.

இந்த நாட்டில் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக வாழ்ந்துவரும் நாம், போர்த்துக்கேயருக்கு எதிராகப் போராடியிருக்கிறோம் ஒல்லாந்தருக்கு எதிராகப் போராடியிருக்கிறNhம் இந்த நாட்டின் சுதந்திரத்துக்காக உழைத்துள்ளோம் இந்த நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு அர்ப்பணங்கள், தியாகங்கள் செய்திருக்கிறNhம். போர்த்துக்கேயருக்கு எதிரான போராட்டத்தில் தென் மாகாணத்தில் மாத்திரம் சுமார் 5000 அல்லது 6000 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இத்தகைய தியாகங்கள் பகிரங்கமாகப் பேசப்படுகிறதோ இல்லையோ இந்த உண்மையை வரலாறு பதிந்து வைத்திருக்கிறது.

முஸ்லிம்கள் இந்த நாட்டில் எதனையும் சுரண்டவில்லை இந்த நாட்டுக்கு நாம் அநியாயம் செய்யவில்லை துரோகமிழைக்கவில்லை. இந்த நாட்டுக்காக  எப்போதும் மகத்தான பங்களிப்புச் செய்திருக்கிறNhம். எல்லா வகையான பங்களிப்புக்களையும் செய்துள்ள நாம், ஒரு பங்களிப்பைச் செய்ய மறந்து விட்டோம். இந்த மார்க்கத்தை அவர்களுக்கு எத்திவைக்காமையே நாம் விட்ட தவறு. இந்த தீனுக்கு சான்று பகிர தவறி விட்டோம். கடந்த ஆயிரம் வருடங்களுக்கு மேலாக இந்த நாட்டில் வாழ்ந்து வருகின்ற முஸ்லிம்களாகிய நாம் கதீஜாக்களையும் அபூ பக்ர்களையும் உமர்களையும் உஸ்மான்களையும் அலிகளையும் உருவாக்கி இருக்க வேண்டும். குறைந்தபட்சம் அபூதாலிப்களையாவது நாம் உருவாக்கியிருக்க வேண்டும். ஆனால், அந்த அடிப்படையான கடமையை நாம் நிறைவேற்றத் தவறி விட்டோம்.

எனவே, அந்தப் பணியை நிறைவேற்றக் கடமைப்பட்டிருக்கிறNhம். எமக்குள்ளே பிளவுபட்டு,  அர்த்தமற்ற வீண் சர்ச்சைகளில் ஈடுபட்டு மார்க்கத்துக்கும் முஸ்லிம்களுக்கம் அபகீர்த்தி ஏற்படுத்தாமல் வாழ வேண்டும். 2 கோடி மக்கள் வாழும் இந்நாட்டில், நாம் இருபது இலட்சம் மட்டுமே. மிகுதி ஒரு கோடியே எண்பது இலட்சம் முஸ்லிமல்லாதவர்களுக்கு இஸ்லாத்தின் தூதை, எத்தி வைக்கக் கடமைப்பட்டிருக்கிறNhம். இந்த அடிப்படையான கடமையை மறந்து விட்டு அர்த்தமற்ற வாதப்பிரதிவாதிகளிலும் வீண் குதர்க்கங்களிலும் ஈடுபடுகின்றபோது அல்லாஹ்வுடைய அருளையும் பரகத்தையும் இழப்போம்.

“அரபுத் தீபகற்பத்தில் இனியும் நான் வணங்கப்படப் போவதில்லை என்பதை ஷைதான் நன்கு அறிந்து கொண்டான். ஆனால், ஒரு விடயத்தில் மாத்திரம் அவன் நம்பிக்கை இழக்காமல் செயற்பட்டுக் கொண்டிருக்கிறான். அதுதான் ‘அத்தஹ்னீஷ் பைனல் முஸ்லிமீன்’ முஸ்லிம்களுக்கு மத்தியில் பிளவை, பிரச்சினையை ஏற்படுத்துவது என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.

எனவே, நாம் எமக்கு மத்தியில் நல்லுறவைக் கட்டியெழுப்ப வேண்டும் நாம் எமக்குள் ஐக்கியப்பட வேண்டும் ஒற்றுமை எனும் கயிற்றைப பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டும். இந்த நாட்டின் முன்மாதிரி சமூகமாகத் திகழ வேண்டும். அடுத்த கட்டமாக மஸ்லிமல்லாதவர்களுக்கு இந்த மார்க்கத்தைச் சொல்ல வேண்டும்.

அல்லாஹுத் தஆலா சொன்னதாக நபியவர்கள் சொல்கிறார்கள்.

“யார் எனது திருப்தியை நாடி பரஸ்பரம் அன்பு கொள்கிறாரோ அவருக்கு எனது அன்பு நிச்சியமாகி விட்டது. எனக்காக யார் பரஸ்பரம் பொறுத்துக் கொள்கிறாரோ அவருக்கும் எனது அன்பு நிச்சியமாகி விட்டது. எனக்காக யார் பரஸ்பரம் நட்புக் கொள்கிறாரோ அவருக்கும் எனது அன்பு நிச்சியமாகி விட்டது.”

முஸ்லிம்களுக்கு மத்தியில் எந்தளவு தூரம் நெருக்கமான அன்பும் பிணைப்பும் பரஸ்பரம் ஐக்கியமும் நிலவ வேண்டும் என்பதனை அற்புதமாகச் சொல்கிறது இந்த ஹதீஸுல் குத்ஸி. முஸ்லிம்கள் பிரிந்து, பிளவுபடக் கூடாது.

“தனித்திருக்கின்ற மனிதனோடு ஷைத்தான் இருக்கின்றான். இரண்டு முஸ்லிம்கள் சேர்ந்து விட்டால் ஷைதான் தூரமாகிறான்” என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சொன்னார்கள். முஸ்லிம்கள் ஒற்றுமையடைகின்ற அளவுக்கு ஷைத்தான் எம்மை விட்டும் தூர விலகிச் செல்கிறான்.

“நீங்கள் ஒற்றுமையாக (ஜமாஅத்தாக) இருங்கள் பிளவையிட்டு நான் உங்களை எச்சரிக்கின்றேன்” என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி  வஸல்லம்) அவர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

தினமும் ஐந்து தடவைகள் கூட்டாக நின்று தொழ வேண்டும் வாராந்தம் ஜுமுஆவுக்காக அனைத்து முஸ்லிம்களும் ஒன்றுகூடி தொழுகையை நிறைவேற்றி ஐக்கியத்தைப் பிரகடனப்படுத்த வேண்டும். வருடாந்தம் உலக முஸ்லிம்கள் ஒன்றிணைந்து முஸ்லிம்களின் ஐக்கியத்தைப் பறைசாற்ற வேண்டும் வேண்டும்.

கூட்டுத் தொழுகை, ஜுமுஆ, ஹஜ்... போன்ற வணக்க வழிபாடுகளின் பிரதான நோக்கம் முஸ்லிம்கள் ஒற்றுமைக் கடைபிடிக்க வேண்டுமென்பதே. இமாம் தொழுகையை நடத்தவதற்கு முன்னர் மஃமூம்களைப் பார்த்து “ஸப்புகளை இடைவெளியின்றி சீராக்கிக் கொள்ளுங்கள்  நெருக்கமாக இருங்கள்” எனச் கூறுகிறார்.

முஸ்லிம் சமூகம் உடல் ரீதியிலும் (Phலளiஉயட) ஒற்றுமையாக, நெருக்கமாக இருக்க வேண்டும் தொழுகைக்கான வரிசையில் ஏற்படுகின்ற கோணல் சமூகத்திலுள்ள கோணலைப் பிரதிபலிக்கிறது. எனவேதான் தொழுகைக்காக வரிசையாக நிற்கும்போதும் (ஸப்) இறுக்கமாக, நெருக்கமாக இருக்க வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்தகிறது.

முஸ்லிம்கள் கூட்டாக இருக்கின்றபோதுதான் அல்லாஹ்வுடைய உதவி கிடைக்கிறது. முஸ்லிம் சமூகத்திலிருந்து பிரிந்து செல்பவர்களுக்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

“யார் முஸ்லிம் சமூகத்திலிருந்து ஒரு சாண் அளவு விலகிச் செல்கிறாரோ அவர் தன்னுடைய கழுத்தில் இருந்து இஸ்லாத்தின் வளையத்தைக் கழற்றி எறிந்தவராவார்.”

முஸ்லிம்கள் அன்பினால் பின்னிப் பிணைக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும். நீங்கள் பரஸ்பரம் ஒருவைரை ஒருவர் வெறுக்காதீர்கள்  பொறாமை கொள்ளாதீர்கள்  ஒருவரைக் கண்டு அடுத்தவர் முகம் சுளிக்காதீர்கள். அல்லாஹ்வுடைய அடியார்களாக இருக்கின்ற நீங்கள் சகோதர்களாக இருங்கள் என்று நபியவர்கள் பணித்திருக்கிறார்கள்.

ஒரு தடவை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் “ஸுன்னத்தான நோன்புகளை விட, ஸுன்னத்தான தொழுகைகளை விட சிறந்த ஓர் அமலை சொல்லித் தரட்டுமா?” என ஸஹாபா தோழர்களைப் பார்த்துக் கேட்டடுவிட்டு “அதுதான் நீங்கள் பிளவுபடாமல் ஒற்றுமையாக இருப்பது” என்றார்கள்.

சமூகத்தில் ஒற்றுமையை நிலைநாட்டுவது எத்தகையதோர் உன்னத அமல் என்பதை சிந்தனை செய்து பாருங்கள். ஆனால், பலர் இதனைப் பொருட்படுத்துவதே இல்லை.

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் பிரதானமானது ஐங்காலத் தொழுகை. அதிலும் அஸர் தொழுகையின் முக்கியத்துவத்தை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அதிகம் வலியுறுத்தியுள்ளார்கள். “ஒருவருக்கு அஸர் தொழுகை தவறிப் போவது அவர் தனது வீடு, வாசல், உற்றார், உறவினர்கள், சொத்து, செல்வம் அனைத்தையும் இழப்பதற்கு சமமாகும் என்று நபியவர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.

ஒரு சந்தர்ப்பத்தில் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த அஸர் தொழுகை நபியவர்களுக்கு தவறி விடுகிறது. ஒரு கோத்திரத்துக்குள்ளே ஏற்பட்ட ஒரு பிணக்கை, அவர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட பகைமையை நீக்கி அவர்களுக்க மத்தியில் சமாதானம் செய்து வைக்கும் முயற்சியில் நபியவர்கள் ஈடுபட்ட காரணத்தினால்தான் அவ்வேளை அஸர் தொழுகையை கழாவாகத் தொழுவதற்கு நபியவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.

இந்த மார்க்கம் எந்த அளவு தூரம் முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையை வலியுறுத்துகிறது அதன் அவசியத்தை எடுத்துச் சொல்கிறது என்று சிந்தித்துப் பாருங்கள்.

எனவே, பெருநாள் தினம் என்பது எமது குடும்பத்தினரிடையே, சகோதர சகோதரிகளுக்கு மத்தியில், அண்டை அயலவர்களுக்கு மத்தியில் ஒற்றுமையைக் கட்டியெழுப்ப வேண்டிய நாள். எம்மைச் சூழ வாழ்கின்ற அனைவர் மத்தியிலும் சாந்தி சமாதானத்தை உருவாக்க வேண்டிய நாள்.

அனைவருக்கும் ஈத் பெருநாள் வாழ்த்துக்கள்!

No comments:

Post a Comment