Thursday, October 23, 2014

ரணிலுக்கு வெல்ல முடியுமா???



சுனன்த தேஷப்ரிய
தமிழில்: அஷ்கர் தஸ்லீம்

அடுத்த வருட ஆரம்பத்தில் ஜனாதிபதித் தேர்தலொன்று நடைபெறலாம் என்ற பேச்சு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. ஆளும் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக மஹிந்த ராஜபக்ஷவே முன்னிறுத்தப்படுவார். எவ்வளவுதான் சட்ட ரீதியான தர்க்கங்கள் முன்வைக்கப்பட்டாலும், அரசாங்கத்தின் பலத்துடன் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னிறுத்தப்படப்போவது மஹிந்த ராஜபக்ஷதான்.

எதுவித ஜனநாயக நடவடிக்கைகளுக்கும் இடம் வைக்காமலேயே ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் குதிக்க உள்ளார். அடக்குமுறைதான் அவரின் அரசியல் மூலோபாயம். வடக்கில் தமிழ் மக்களை வெல்வதற்காக, அங்கு உலா வரும் அதேவேளை, வடக்கையும் கிழக்கையும் வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளுக்குத் தடை செய்யப்பட்ட பிரதேசங்களாக உத்தியோகபூர்வமற்ற முறையில் ஆக்கியுள்ளார் ராஜபக்ஷ.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ளதற்கேற்ப, பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின்றி வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் வடக்குக்கும் கிழக்குக்கும்; செல்ல முடியாது. இதன் சமூக பொருளாதா விளைவுகள் யாழ் தேவி ரயிலை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைத்ததையும் விட பாரதூரமானதாகும். இது ராஜபக்ஷவின் தேர்தல் திட்டத்தில் சேதம் உண்டாக்கும் என்பது திண்ணம். என்றாலும், அவரின் அடக்குமுறை அரசியல் மூலோபாயம் தேர்தல் திட்டத்தை விடவும் உயரத்திலேயே இருக்கின்றது.


கடந்த 14 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற ஊடகவியல் நிகழ்வொன்றை அடக்குவதற்கு ராஜபக்ஷவின் யுத்த இயந்திரம், விக்டர் ஐவன் உள்ளிட்டு அதிகமான ஊடகவியலாளர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தது.

பிபிசி சிங்கள சேவை அறிக்கையிடுவதற்கேற்ப, ‘விக்டர் ஐவன் மற்றும் அமல் ஜயசிங்க ஆகிய சிரேஷ்ட ஊடகவியலாளர்களின் தலைமையில், கொழும்பு ஜானகி ஹோட்டலில், ஆய்வு ரீதியான ஊடகவியல் குறித்த பயிற்சி நிகழ்வொன்று நடைபெறவிருந்தது. இதில் கலந்து கொள்ளவிருந்த ஊடகவியலாளர்கள் மற்றும் அதன் ஏற்பாட்டாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை மாலை முதல் தொலைபேசியில் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. அத்தோடு, சில ஏற்பாட்டாளர்களின் பிள்ளைகளுக்கும்கூட மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது…’ 

‘கலந்து கொண்டால் கொன்று விடுவதாக எனக்குச் சொன்னார்கள்…’ என்று நிகழ்வில் கலந்து கொண்ட வடமேல் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜனூர் கிசிலான் தெரிவித்துள்ளார். இறுதியில், நிகழ்வு நடைபெற இருந்த ஹோட்டலுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதால், நிகழ்வை இரகசியமான ஒரு இடத்தில் நடத்தும் நிலை ஏற்பட்டது.

தேர்தல் திட்டத்தை தாண்டி இந்த அடக்குமுறை திட்டம் பரந்துவிட்டது. கொழும்பில் எந்தவொரு சிங்கள, ஆங்கில ஊடகமும் இந்த சம்பவத்தை உடனடிச் செய்தியாக அறிக்கையிடாதளவு அது பரந்துள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் எந்தவகையிலும் நியாயமானதாக அமையப்போவதில்லை என அரசியல் எழுத்தாளர் தரீஷா பெஸ்டியன் கடந்த வாரம் எழுதியிருந்தார். அது வன்முறைத்தனமாக இருக்கும் என்றும் அரச இயந்திரம், தனது எல்லையற்ற செல்வம், மனித வளம் ஆகியவற்றை ஜனாதிபதி ராஜபக்ஷ அதற்காகப் பயன்படுத்துவார் என்றும் அவர் தெரிவித்திருந்தார். ஜனாதிபதித் தேர்தல் குறித்த அரசியல் பகுப்பாய்வுகளில் பல பொதுவான விடயங்கள் இருக்கின்றன.
அவற்றை இவ்வாறு நோக்கலாம்:

சிறுபான்மையினரின் வாக்குகள்தான் ராஜபக்ஷவுக்கு எதிரான போராட்டத்தில் அமைதியான, ஆனால் முக்கியமான தரப்பாக இருக்கப்போகின்றது. யுத்தத்துக்குப் பின்னரான அடக்குமுறைத்தனமான ராஜபக்ஷ ஆட்சி தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களை முழுமையாகவே தூரமாக்கியுள்ளது. எனவே, சிங்கள வாக்குகளில் 60 வீதத்துக்கும் அதிகமானவற்றைப் பெற்றுக் கொள்ள முடியாமல்போனால் ராஜபக்ஷவினர் தோல்வியடைவர்.

பாரம்பரிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமைத்துவத்தை தமது உறவுக்காரருக்கு வழங்குவதன் மூலமும் வளங்களைக் கொள்ளையடிப்பதன் மூலமும் தமது கட்சிக்குள்ளேயே அவர்கள் எதிர்ப்பை உருவாக்கிக் கொண்டுள்ளனர். எனவே, தொடர்ந்தும் கடுமையாகிக் கொண்டு செல்கின்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, தம்மிடமுள்ள அனைத்து சாதனங்களையும் ராஜபக்ஷவினர் பயன்படுத்துவர்.

இந்த ஜனாதிபதித் தேர்தல் ராஜபக்ஷவினருக்கு முக்கியமானதாகும். இதில் தோற்றுப்போவது என்பது ராஜபக்ஷவினருக்கு நினைக்கவும் முடியாத சமூக அரசியல் நெருக்கடியாகும். இவ்வாறான போராட்டத்தில் ஒரேயொரு நிபந்தனையினடிப்படையிலேயே எதிர்க்கட்சியால் வெற்றி பெற முடியும். ஐக்கியப்பட்ட ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரமே அந்த நிபந்தனை.

இவ்வாறான ஒரு தேர்தல் பிரச்சாரத்தை எதிர்வரும் சில வாரங்களுக்குள் கட்டியெழுப்ப முடியுமா? அவ்வாறான நடவடிக்கையின் அடையாளமாக ஒரு பொது வேட்பாளரை முன்னிறுத்த முடியுமா என்பதுதான் தற்போதுள்ள பிரச்சினை.

இதற்குத் தீர்வாக, எந்தவொரு விரிந்த கலந்துரையாடல்களும் இன்றி, தன்னைத் தானே பொது வேட்பாளராக முன்னிறுத்தியுள்ளார் ரணில் விக்ரமசிங்க. அது மட்டுமல்லாது அவர் இன்னும் பேசிக் கொண்டிருப்பது எதிர்க்கட்சிகளின் பொதுவான அரசாங்கம் பற்றியல்ல. 

கடந்த 14 ஆம் திகதி ஊடகங்கள் அறிக்கையிட்டிருந்ததற்கேற்ப, ஆட்சிக்கு வரும் ஐக்கிய தேசியக் கட்சி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாமலாக்குவதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தே பொது வேட்பாளர் முன்னிறுத்தப்படுவார் என்றே ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் சொல்கிறார்கள். ஐக்கிய தேசியக் கட்சியின் உத்தியோகபூர்வ இணையதளமும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு தனித்து நின்று ஜனாதிபதித் தேர்தலை வெல்ல முடியும் என்றே தர்க்கிக்கின்றது.

தனிப்பட்ட வகையில் ரணில் விக்ரமசிங்கவிடம் நல்ல பண்புகள் இருந்தபோதும், பொது மக்களை உயிர்ப்பூட்டக்கூடிய அரசியல்வாதியல்ல அவர். அவர் மக்கள்சார் அரசியல்வாதி அல்ல் அவர் ஒரு தொழினுட்பம்சார் அரசியல்வாதி. அவ்வாறிருப்பினும் அவசர அவசரமாக எதிர்வரவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், அடக்குமுறைத்தனமான ராஜபக்ஷ ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சியின் பலம்வாய்ந்த வேட்பாளராக வரப்போவது ரணில் விக்ரமசிங்கதான் என்பது உறுதியானதே.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி ஏனைய எதிர்க்கட்சிகளுடன் எவ்வாறு நிதானமாக நடந்து கொள்ளும் என்பதைப் பொறுத்தே, ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக விரும்பிகளின் எதிர்காலம் தங்கியுள்ளது.

உண்மையில் ராஜபக்ஷவினரின் தோல்விக்கான வழியை திறந்து கொண்டது அவர்களேதான். ராஜபக்ஷவினரின் அடக்குமுறைத்தனமான, ஊழல் அரசியல் சிறுபான்மை சமூகங்களுக்கு உள்ளால் மட்டுமல்லாது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளும் சிங்கள சமூகத்துக்குள்ளும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கைக்கெட்டும் தூரத்திலுள்ள ஜனாதிபதித் தேர்தலின் வெற்றியை யதார்த்தமாக்கிக் கொள்ள வேண்டுமாயின், ‘நான்தான் பெரியவன்’ என்ற பெருமித அரசியலை ரணில் முதலில் இல்லாமலாக்கிக் கொள்ள வேண்டும். கணக்கெடுப்பு மாயங்கள், மந்திரங்கள் மூலம் அரசியல் போராட்டங்களை வெல்ல முடியாது. மக்கள்தான் தேர்தலின் போராட்டக் களம். மக்களை நோக்கிய பெரும் ஒன்றுபட்ட அரசியல் பிரச்சாரத்தின் மூலமாகவன்றி ராஜபக்ஷ அடக்குமுறையை தோற்கடிக்க முடியாது.

ஜனாதிபதித் தேர்தல் வரும் என்ற அவதானமே இல்லாதிருந்த கடந்த இரு வருடங்களுக்கு முன்னரே, சோபித தேரர் உள்ளிட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் சிலர்தான், பொது எதிர்க்கட்சி என்ற கோஷத்தை கட்டியெழுப்பினர். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்தலே அதன் முக்கிய அம்சம். அப்போது, ரணில் விக்ரமசிங்க அரசியல் தூக்கத்தில் இருந்தார். தனது கட்சியை ஒன்றுசேர்த்து, ராஜபக்ஷ ஆட்சியின் மனித விரோத, ஜனநாயக விரோத அரசியலை தோற்கடிப்பதற்கு அவர் ஆர்வம் காட்டவில்லை.

ஆட்சி தானாகவே வந்து, தனது கையில் விழும் என்ற கனவிலேயே அவர் இன்னும் இருப்பதாகத் தெரிகிறது. அடக்குமுறைத்தனமான ராஜபக்ஷ ஆட்சியை ரணிலால் அல்லாது, ஒரு பொது எதிர்க்கட்சிகளால்தான் முடியும். அவ்வாறான ஒரு பொது நடவடிக்கையை அடையாளப்படுத்தும், கூட்டுத் தலைமைத்துவம், பொது உடன்பாட்டுடனான திட்டமொன்று ஆகியவற்றின் மூலம் இலங்கைப் பிரஜைகளை வலுவூட்டாமல், எண் கணிதம் மூலம் ஜனாதிபதியாக வருவது பொய்யானது என்பதை இப்போதிருந்தே புரிந்து கொள்வதும், அதனடிப்படையில் அவசர அவசரமாக பணிகளைத் தொடங்குவதும்தான் இன்றைய பொது எதிர்க்கட்சிகளின் முதலாவது சவால்.

அடுத்த சவாலையும் இரண்டாம் தரமாக நோக்க முடியாது. அதாவது, இந்த வகையான பொது வேலைத் திட்டத்தின் மூலம் உண்மையான மனித நேய, ஜனநாயக மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் பார்த்துக் கொள்வதுவே அடுத் சவால்.

No comments:

Post a Comment