Monday, September 1, 2014

பெண்கள் தனியாக ஹஜ் செய்யலாமா? -ஒரு நடுநிலைப் பார்வை


வழமையைப் போன்று இம்முறையும் உலக நாடுகள் அனைத்திலிருந்தும் பல முஸ்லிம்கள் மக்கமா நகரை நோக்கிப்போக தயாரான நிலையில் உள்ளனர். ஏலவே ஒரு சில நாட்களுக்கு முன்னர் இரண்டு இலச்சத்திற்கும் மேற்பட்ட இந்திய முஸ்லிம்கள் பயணத்தை ஆரம்பித்து வைத்ததாக ஒரு சில பதிவுகளை வாசிக்கக் கிடைத்தது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் இத் தலைப்பில் சில விடயங்களை விளக்குவது பொருத்தம் என நினைக்கின்றேன். உலக மாந்தர்களின் அருட்கொடையாம் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் பிறந்து வளர்ந்த புனித பூமியில் அமைந்துள்ள இறை இல்லமாம் கஃபாவை தரிசித்து சில கிரியைகளை நிறைவேற்றுவதை இஸ்லாம் தனது ஜம்பெரும் கடமைகளில் ஒன்றாக ஆக்கியிருக்கின்றது. ஒரு முஸ்லிம் மக்கா சென்றுவர உடல், உள மற்றும் பொருளாதார ரீதியான சக்தியைபெறுவார் என்றால் அவர் மீது ஹஜ் கடமையாகிவிடும் என்பதை அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்.

وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ عَنِ الْعَالَمِينَ
இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும்.  (3:97)

இந்த வசனம் சக்தியுள்ளவர்களுக்கு ஹஜ் கடமை என பொதுவாக பேசினாலும் பெண்கள் என வரும்போது இந்த நிபந்தனையுடன் வேறு நிபந்தனை உண்டா?? இல்லையா?? என்பதில் வரலாறு நெடுகிலும் அறிஞர்களுக்கு மத்தியில் கருத்துவேறுபாடு நிலவிவருவதை அவதானிக்க முடியுமாக உள்ளது. ஒரு பெண் பிரயாணம் செய்ய அவளது கணவன் அல்லது திருமணம் முடிக்க ஹராமான (மஹ்ரம்) ஆண்துனை இருந்தால்தான் அவளுக்கு ஹஜ் கடமை என ஒரு சாராரும் இவ்வாறான எந்த நிபந்தனையும் இல்லை என மற்றொரு சாராரும் கூறுகின்றனர். இரு தரப்பினரின் ஆதாரங்களையும் வாதப்பிரதிவாதங்களையும் ஆராய்ந்து பலமான கருத்து எது?? பலவீனமான கருத்து எது?? என பொதுமக்களுக்கு தெளிவுபடுதுவதே தலைப்பின் நோக்கம்.


முதல் சாராரின் ஆதாரங்கள்.

ஒரு பெண்மீது ஹஜ் கடமையாக வேண்டும் என்றால் உடல்,உள மற்றும் பொருளாதார சக்தியோடு சேர்ந்து பிரயாணத் துணையாக கணவன் அல்லது மஹ்ரமான ஒரு ஆண் தேவை.இதை நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு விளக்கினார்கள்.

حدثنا إسحاق بن إبراهيم الحنظلي ، قال : قلت لأبي أسامة : حدثكم عبيد الله ، عن نافع ، عن ابن عمر رضي الله عنهما : أن النبي صلى الله عليه وسلم قال :
 " لا تسافر المرأة ثلاثة أيام إلا مع ذي محرم"    البخاري 1051,1051  
திருமணம் செய்யத்தடைவிதிக்கப்பட்டவருடனே (மஹ்ரம்) தவிர ஒரு பெண் மூன்று நாட்கள் பிரயாணம் செய்யக்கூடாது.” புகாரி – 1086,1087

இந்த ஹதீஸில் ஒரு பெண் மூன்று நாட்கள் அல்லது அதற்கு மேல் பிரயாணம் செய்யவேண்டும் என்றால் கட்டாயம் அவளுடன் ஒரு மஹ்ரம் இருக்கவேண்டும் என்ற கருத்தை சுட்டிக்காட்டுகின்றது. ஹஜ் கடமையானது மூன்று நாட்களைவிட அதிகமானது என்பதால் ஒருபெண் தனியாக ஹஜ் செய்வது தடைச்செய்யப்பட்ட ஒன்றாகும் என்பதுவே இவர்களின் வாதமாகும். இவர்கள் இரண்டாவது ஆதாரமாக பின்வரும் ஹதீஸை காட்டுகின்றனர்.

حدثنا أبو النعمان ، حدثنا حماد بن زيد ، عن عمرو ، عن أبي معبد ، مولى ابن عباس ، عن ابن عباس رضي الله عنهما ، قال : قال النبي صلى الله عليه وسلم : " لا تسافر المرأة إلا مع ذي محرم ، ولا يدخل عليها رجل إلا ومعها محرم " ، فقال رجل : يا رسول الله إني أريد أن أخرج في جيش كذا وكذا ، وامرأتي تريد الحج ، فقال : " اخرج    معها                       (1772 صحيح البخاري)

திருமணம் செய்யத்தடைவிதிக்கப்பட்டவருடனே (மஹ்ரம்) தவிர ஒரு பெண் மூன்று நாட்கள் பிரயாணம் செய்யவேண்டாம். ஒரு பெண்ணுடன் மஹ்ரமானவர்கள் இல்லாத நிலையில் அவளிடம் ஒரு ஆண் செல்லவேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறியபோது ஒருவர் அல்லாஹ்வின் தூதரே…! நானோ இன்னின்ன போர்களில் பங்கெடுக்க விரும்புகின்றேன் எனது மனைவியோ ஹஜ் போகவிரும்புகின்றால்(எனது கடமை என்ன?) எனக்கேட்டார். எனவே நபி (ஸல்) அவர்கள் நீ உனது மனைவியுடன் ஹஜ்ஜை நிறைவேற்று எனக் கூறினார்கள். புகாரி -1861

நபி (ஸல்) அவர்கள் ஜிஹாத் செய்வதில் ஆவலாக இருந்த இந்தத் தோழரை தனது மனைவியின் ஹஜ்ஜுக்கு துணையாக அனுப்பியது பெண்கள் தனியாக ஹஜ் செய்வதெற்கு மார்க்கத்தில் எந்த விதமான அனுமதியும் இல்லை என்பதை பறைசாற்றுகின்றது என்பது இந்த ஹதீஸில் இருந்து இவர்கள் முன்வைக்கும் வாதமாகும்.

இரண்டாம் சாராரின் ஆதாரங்களும் வாதங்களும்.

பெண்கள் தனியாக ஹஜ் செய்வதெற்கு மார்க்கத்தில் எந்தத் தடையும் கிடையாது என்பதுவே இவர்களின் தீர்ப்பு. முதல் சாராரைப்போன்றே இவர்களும் சில ஆதாரங்களை எடுத்துக்காட்டுகின்றனர். நாம் ஏலவே பார்த்த அல்-குர்ஆன் வசனம் இவர்களின் முதல் ஆதாரம்.

இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும்.  (3:97)

ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் உடல், உள மற்றும் பொருளார ரீதியான சக்தியைபெறுவார்கள் என்றால் அவர்கள் மீது ஹஜ் கடமையாகிவிடும் என வல்ல நாயன் இவ்வசனத்தில் பொதுவாகவே கூறியுள்ளான். பெண்களுக்கு மேலதிகமாக ஆண்துணை தேவை என்ற நிபந்தனை மார்க்கத்தில் இருக்குமாக இருந்தால் அல்லாஹ் இந்த வசனத்தில் அதை சுட்டிக்காட்டியிருக்கவேண்டும். இவ்வாறு இல்லாமல் அல்லாஹ் நிபந்தனைகளை ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவாக கூறுவதே பெண்கள் தனியாக ஹஜ் செய்வதெற்கு மார்க்கத்தில் எந்தத் தடையும் கிடையாது என்பதற்கு போதிய சான்றாகும்.இது தான் இவர்கள் இந்த வசனத்திலிருந்து வைக்கும் வாதம்.

மேலும் முதல் தரப்பினர் கூறும் முதலாம் ஆதாரமான திருமணம் செய்யத்தடைவிதிக்கப்பட்டவருடனே (மஹ்ரம்) தவிர ஒரு பெண் மூன்று நாட்கள் பிரயாணம் செய்யக்கூடாது.”  என்ற ஹதீஸுக்கு இவ்வசனத்தையே மறுப்பாகவும் கூறுகின்றனர். அதாவது இந்த ஹதீஸ் பொதுவான பிரயாணங்களின் போது பெண்ணுக்கு மஹ்ரம் அவசியம் என்ற கருத்தைக் காட்டுவதாகவும் இக்கருத்துக்கு விதிவிலக்காக மேற்கூறிய வசனம் அமைவதால் ஹஜ் பிரயாணத்தில் மஹ்ரம் அவசியம் இல்லை எனத்தான் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் வாதாடுகின்றனர். இக் கருத்தைப் பலப்படுத்தும் விதமாக சில ஹதீஸ்களையும் சான்றாக முன்வைக்கின்றனர்.

حدثني محمد بن الحكم ، أخبرنا النضر ، أخبرنا إسرائيل ، أخبرنا سعد الطائي ، أخبرنا محل بن خليفة ، عن عدي بن حاتم ، قال : بينا أنا عند النبي صلى الله عليه وسلم إذ أتاه رجل فشكا إليه الفاقة ، ثم أتاه آخر فشكا إليه قطع السبيل ، فقال : " يا عدي ، هل رأيت الحيرة ؟ " قلت : لم أرها ، وقد أنبئت عنها ، قال " فإن طالت بك حياة ، لترين الظعينة ترتحل من الحيرة ، حتى تطوف بالكعبة لا تخاف أحدا إلا الله ، - قلت فيما بيني وبين نفسي فأين دعار طيئ الذين قد سعروا البلاد.......... البخاري 3420

அதீ இப்னு ஹாதிம் (ரழி) கூறினார்கள்: நான் நபிகளாருடன் இருந்தபோது ஒருவர் வந்து வறுமையைப் பற்றி முறையிட்டார். பின்னர் இன்னுமொருவர் வழிப்பறிக் கொள்ளையைப் பற்றி முறையிட்டார். எனவே நபி(ஸல்) அவர்கள் அதியே…! நீ ஹீராவைப் (ஒரு பிரதேசம்) பார்த்ததுண்டா? எனக் கேட்டார்கள். அதற்கு நான் அதை நான் பார்த்ததில்லை என்றாலும் அது பற்றி எனக்கு கூறப்பட்டிருக்கின்றது என்றேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள்  நீ நீண்ட காலம் வாழ்ந்தால் ஒட்டகச் சிவிகையில் அமர்ந்து ஒரு பெண் ஹீராவில் இருந்து கஃபாவை வலம் வருவதற்காகவேண்டி(தவாப்) பிரயாணிப்பதைப் பார்ப்பாய்…! அவள் வழியில் அல்லாஹ்வை தவிர வேறுயாருக்கும் அஞ்ச மாட்டாள்………   புகாரி  3595

இந்த ஹதீஸில் ஒரு பெண் ஹீராவில் இருந்து கஃபாவை நோக்கி தனியாக பிரயாணம் செய்வதுபற்றியும், பிரயாணத்தின் நோக்கம் கஃபாவை தவாப் செய்வதுதான் என்பது பற்றியும் பேசப்பட்டுள்ளது. பெண்கள் தனியாக ஹஜ் செய்வது மார்க்கத்தில் தடைசெய்யப்பட்ட விடயம் என்றால் தனியாக ஹஜ் செய்யப்போகும் பெண்ணை நபி(ஸல்) அவர்கள் சிலாகித்துப்பேசியிருப்பார்களா???  எனவே இந்த ஹதீஸானது பெண்கள் தனியாக ஹஜ் செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது என்பதை படம் பிடித்துக்காட்டுகின்றது. இதுவே இரண்டாம் தரப்பினர் இந்த ஹதீஸின் மூலம் முன்வைக்கும் வாதமாகும். மேலும் முதலாவது தரப்பினரின் இரண்டாவது ஆதாரமான மனைவியுடன் கணவனையும் சேர்ந்து ஹஜ் செய்யுமாறு நபிகளார் ஏவிய ஹதீஸுக்கு மறுப்பாக இந்த ஹதீஸ் அமைவதாகவும் கூறுகின்றனர். அதாவது இந்த ஹதீஸில் பெண்கள் தனியாக ஹஜ் செய்ய அனுமதிக்கப் பட்டுள்ளதால்  முதலாம் சாராரின் ஆதாரம் ஆண்துணை இருந்தால் சிறந்தது என்பதைத்தான்  காட்டுமே தவிர கட்டாயம் ஆண்துணை வேண்டும் என்பதெற்கு எந்த முகாந்திரமும் கிடையாது என்பதுவே இவர்களின் மறுப்பு.

நடுநிலைக் கருத்து

இவ்வாறு எதிரும் புதிருமாக முரண்பட்டக்கருத்துக்கள் ஒரு பிரச்சினையில் காணப்படுமாக இருந்தால் அல்லது நேரெதிரான கருத்துக்களை கொண்டதாக ஆதாரங்கள் காணப்பட்டால் நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என ஒரு பக்கத்தில் தொங்கிக்கொள்ளாமல் இரு சாராரின் வாதப்பிரதிவாதங்களை ஆரய்ந்து ஒரு நடுநிலைக் கருத்திற்கு வருவது முஸ்லிம்களின் கடமையாகும். இதைத்தான் ஹதீஸ்துறை வல்லுனர்கள் முரண்பட்ட ஹதீஸ்களை இனைத்து ஒரு பொதுக்கருத்திற்கு வரவேண்டும் எனக் கூறுகின்றார்கள். இந்த அடிப்படையில் நாம் முதலாம் சாராரின் கருத்தை ஏற்று அமல் இபாதத்துக்களை அமைத்துக்கொள்வோமாக இருந்தால் இரண்டாம் சராரின் ஆதாரங்களை மறுக்கவேண்டிய ஒரு துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்படுவோம். மாற்றமாக இரண்டாம் சாராரின் கருத்துக்களை ஏற்போமானால் எந்தவொரு ஹதீஸையும் மறுக்கவேண்டிய நிலையேற்படாது.எனவே இரண்டாம் சாராரின் கருத்துக்களை ஏற்று முதல் சாராரின் ஆதாரங்களுக்கு தக்க விளக்கமளித்து பின்வருமாறு தீர்வைக்காண்பது சாலச்சிறந்த்து.

ஒரு பெண் மக்கா சென்றுவர உடல், உள மற்றும் பொருளாதார ரீதியான சக்தியைபெறுவாள் என்றால் அவள் மீது ஹஜ் கடமையாகிவிடும். தனக்குத் துணையாக கணவனை அல்லது மஹ்ரமான ஒரு ஆணை அழைத்துச்செல்ல கால, சூழல் மற்றும் பொருளாதாரம் இடம் கொடுக்கும் என்றால் புகாரி 1086,1861 என்ற ஹதீஸ்களின் அடிப்படையில் அவ்வாறு செய்வதே மிக ஏற்றமானது. மாற்றமாக ஒரு பெண் மீது ஹஜ் கடமையாகியிருக்கின்றது என்றாலும் அழைத்துச்செல்ல ஆண்துணை இல்லை என்றாலோ அல்லது அழைத்துச்செல்ல பொருளாதாரம் இடம்தரவில்லை என்றாலோ புகாரி 3595 என்ற ஹதீஸின் அடிப்படையில் தனியாக கடமையை நிறைவேற்றுவது குற்றமாகாது. இந்த இடத்தில் ஒரு விடயத்தில் அதிகமாக கரிசனைக் காட்டவேண்டும் அதாவது பெண்கள் தனியாக ஹஜ் செய்வதெற்கான அனுமதி, பொதுவான அனுமதி கிடையாது. மாற்றமாக தனியாக பிரயாணம் செய்தாலும் பெண்ணின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என்ற சூழல் காணப்படவேண்டும். இதை நாம் ஏலவே பார்த்த ஹதீஸ் தெளிவு படுத்துகின்றது

 நீ நீண்ட காலம் வாழ்ந்தால் ஒட்டகச் சிவிகையில் அமர்ந்து ஒரு பெண் ஹீராவில் இருந்து கஃபாவை வலம் வருவதற்காகவேண்டி(தவாப்) பிரயாணிப்பதைப் பார்ப்பாய்…! அவள் வழியில் அல்லாஹ்வை தவிர வேறுயாருக்கும் அஞ்ச மாட்டாள்………   புகாரி  3595

இந்த ஹதீஸ் பெண்கள் தனியாக பிரயாணம் செய்வதை பொதுவாக அனுமதிக்கவில்லை மாற்றமாக அந்தச் சூழல் எவ்வாறாக இருக்கவேண்டும் என்பது பற்றியும் பேசுகின்றது. அல்லாஹ்வை தவிர வேறு யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை என்ற அளவுக்கு அந்தச் சூழல் காணப்படவேண்டும் அதாவது பெண்களின் பாதுகாப்புக்கு எந்தவிதமான அச்சுருத்தலும் இல்லாத சூழலாக இருக்கவேண்டும். எனவே தனியாக பிரயாணம் செய்யவேண்டிய நிலையில் உள்ள பெண்கள் தான் வாழுகின்ற சூழல், காலம், பிரயாணத்தின் தன்மை, தனக்குத் துணையாக இன்னும் பெண்கள் இருக்கின்றார்களா?, தான் தனியாக செல்கின்றேனா? அல்லது ஒரு குழுவோடு இணைந்து செல்கின்றேனா? என்பன போன்ற விடயங்களை வைத்து தனது பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும். உங்கள் அனைவரினதும் ஹஜ்ஜை அல்லாஹுத்தஆலா ஏற்று அருள்பாரிப்பானாக…..  ஆமீன்

وهذا ما عندي والعلم عند الله تعالى وآخر دعوانا أن الحمد لله رب العالمين


No comments:

Post a Comment