Sunday, September 21, 2014

ஜனாதிபதித் தேர்தல்: ஜே.வி.பி தனது பாத்திரத்தைப் புரிந்து கொள்ளுமா?


அஷ்கர் தஸ்லீம்


2015 ஆம் ஆண்டின் முதற் கூறுகளில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறலாம் என்ற பேச்சு நீண்ட நாட்களாகவே அடிபட்டு வருகின்றது. நடைபெற்ற ஊவா மாகாண சபைத் தேர்தல் அதன் ஒத்திகையாகவே பலராலும் அடையாளப்படுத்தப்படுகின்றது.

அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா வின் ஜெனீவா மனித உரிமை விசாரணையின் விளைவாக சிலவேளை இலங்கைக்கு எதிரான தடைகள் விதிக்கப்படலாம். அதற்கு முன்னரே பிரதான இரு தேர்தல்களையும் நடத்தி முடித்து ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்கான ஒரு முயற்சியாகவும் இது பார்க்கப்படுகிறது.

ஒரு புறம், இந்த வருடத்தின் ஆரம்பத்தில் நடைபெற்ற, மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல் பெறுபேறுகளைப் பார்க்கும்போது, அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை குறைந்துள்ளதை அவதானிக்கலாம்.

இன்னொரு புறம், பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க மீதான நம்பிக்கை கூடியதைக் காணவும் முடியவில்லை. ஐ.தே.க வின் இடத்தை நிரம்பும் நிலைக்கு ஜே.வி.பி யும், பொன்சேகாவின் ஜனநயாகக் கட்சியும் முன்னேறியதனையே அவதானிக்க முடிந்தது.



யுத்த வெற்றிக்குப் பின்னர் தற்போதைய அரசாங்கத்தினதும் ஜனாதிபதியினதும் மீது ஏற்பட்ட பெரும் ஜனாபிமானம், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் வெளிப்படலாம் என்று எதிர்பார்க்க முடியாத நிலையே உள்ளது. எனவே, கடந்த இரு ஜனாதிபதித் தேர்தல்களை விடவும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் வித்தியாசமான சீனாரியோக்களைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரத் திட்டங்களைத் தொடங்குவதற்கான முன்னெடுப்புக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற வாதமும் தலைதூக்கியுள்ளது.

அரசியலமைப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள 18 ஆம் சீர்திருத்தத்தின்படி, மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற இந்த வாதம் குறித்து, நீதிமன்றத்தின் கருத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேண்டியிருப்பதாக ராவய செய்தி வெளியிட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ மூன்றாம் தடவையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற இந்த வாதத்தைக் கதைத்துக் கொண்டிருப்பது, வெறுமனே நேரத்தை வீணடிப்பதாகும் என்றே அரசியல் விஞ்ஞானி தயான் ஜயதிலக கூறுகிறார். தயான் கூறும் கருத்தில் நியாயம் இருப்பதாகவே தெரிகிறது.

மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து போட்டியிடப் போகிறவர் யார் என்பது குறித்த உடன்பாடும், எதிர்க்கட்சிகளுக்கு இடையில் இதுவரை எட்டப்படவில்லை.

ஒரு புறம் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் சோபித தேரர் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, ஐ.தே.க சார்பில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவார் என்றும் உத்தியோகபூர்வமற்ற வழியில் தெரிய வருகிறது. ரணில் போட்டியிட்டால் தாமும் ஒரு வேட்பாளரை களமிறக்குவதாக ஜே.வி.பி கூறி வருகிறது. பொன்சேகா தரப்பிலிருந்து பதில் குறிகளைக் காணவில்லை.

இவ்வாறு எதிர்தரப்புகள் ஒன்றிணைந்து ஒரு பொது வேட்பாளரை களமிறக்குவது குறித்த உடன்பாட்டுக்கு வராதபோது, எதிர்க்கட்சிகள் எதிர்பார்ப்பது போன்று மஹிந்த அல்லாத வேறொருவர் ஜனாதிபதியாக வருவது வெறும் கனவாகவே போய்விடும்.

எவ்வாறாயினும், ரணில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது நகைப்புக்குரிய ஒரு விடயமாகவே உள்ளது. ஐ.தே.க மீதான பொது மக்களின் நம்பிக்கை குறைந்து போவதற்கு அவரின் பொடுபோக்கான தலைமைத்துவமே காரணம்.

கடந்த இரு தசாப்தங்களாகத் தோற்று வரும் இவர், அரசியல் களநிலவரங்களின் அடிப்படையில் பார்க்கும்போது, வெற்றியடைவார் என்று எதிர்வு கூறுவது மிகவும் கடினமாகவே உள்ளது.

பொது வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்தும் உடன்பாட்டுக்கு எதிர்க்கட்சிகள் வந்து, அதன் அடிப்படையில் ரணில் பொதுவேட்பாளராக முன்னிறுத்தப்பட்டால் அதுதான் சமகாலத்தின் முதற்தர நகைப்பாகவும் இருக்கும்.

சோபித தேரரை பொது வேட்பாளராக முன்னிறுத்தும் முயற்சியும் பொருத்தமற்றதே. சிறுபான்மை இனங்களின் வாக்குகளை அவர் எவ்வாறு பெறப்போகிறார் என்பது பெருத்த கேள்விக்குறியாகவே உள்ளது.

ஜே.வி.பி தனது வேட்பாளரை களமிறக்குவதும் சாணக்கியமான ஒரு அரசியல் முன்னெடுப்பாக அமையப் போவதில்லை. சமீபத்திய தேர்தல்களில் ஜே.வி.பி முன்னேறி வந்துள்ளபோதும், ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வேட்பாளரை களமிறக்கி வெற்றி பெறும் அளவுக்கு ஜே.வி.பி க்கு செல்வாக்கோ வாக்கு வங்கியோ இல்லை என்ற யதார்த்தத்தையும் ஏற்றாக வேண்டும்.

இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, எதிர்க்கட்சிகள் இணைந்து, ஒரு பொது உடன்பாட்டில் ஒன்றுபட்டு, ஆகர்ஷணமிக்க ஒருவரை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக களமிறக்குவதே சாணக்கியமான முன்னெடுப்பாக அமையப் போகிறது.

இந்தப் பொது வேட்பாளரை முன்னிறுத்தும் செயற்றிட்டத்தை முன்னெடுக்க மிகவும் பொருத்தமான தரப்பாக ஜே.வி.பி யே உள்ளது. மிகவும் கட்டுக்கோப்பான கட்சி அது அதன் தலைவர் அநுர குமார திஸாநாயக உயிர்த்துடிப்புமிக்க, துணிவான ஒரு இளம் அரசியல்வாதி.

அநுர குமார திஸாநாயக தலைமைத்துவத்தை ஏற்றதன் பின்னர், ஜே.வி.பி விவேகத்துடனான வேகமான பயணத்தை மேற்கொள்கிறது. நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தல் பெறுபேறுகள் அதற்கான சிறந்த எடுத்துக்காட்டு.

இந்த நிலையில, தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குப் போட்டியாக ஒருவரைக் களமிறக்கும் வேலைத்திட்டத்தில், ஜே.வி.பி தனது பாத்திரத்தை சரியாகப் புரிந்து கொண்டு செயற்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

No comments:

Post a Comment