Wednesday, September 3, 2014

நவீன இஸ்லாமிய சிந்தனையும் எமது நிலையும்



அஷ்கர் தஸ்லீம்



என்றுமில்லாதது போல் இஸ்லாத்தைப் பற்றித் தேடுபவர்களது தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதனை அவதானிக்கின்றோம். உலகின் அனைத்து விவகாரங்களையும் அனைத்து அறிவுத் துறைகளையும் இஸ்லாமியப் பின்னணியோடு புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்து வருவதனையும் அவதானிக்கின்றோம். மிகவும் ஆரோக்கியமான இந்தத் தோற்றப்பாடு ஐரோப்பா முதல் ஆசியா வரை வியாபித்திருக்கின்றமை இன்னுமொரு விஷயம்.

இத்தனைக்கும் எமது தமிழ் மொழிச் சூழலில் இஸ்லாத்தை ஒரு முழு வாழ்க்கைத் திட்டமாக முன்வைக்கும் முறைமை அவ்வளவு வளர்ச்சியுற்றதாகத் தெரிவதில்லை.  இஸ்லாத்தை ஒரு மாற்று சிந்தனையாக, ஒரு நாகரிகத் திட்டமாக, ஒரு வாழ்க்கை முறையாக முன்வைக்கும் போக்கு இன்னும் வலுப்படுத்தப்பட வேண்டிய தேவை அதிகம் உணரப்படுகின்றது.

சமகால உலகு எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள், சிக்கல்கள், சவால்கள் மற்றும் தற்கால உலகில் செல்வாக்குச் செலுத்துகின்ற முதலாளித்துவம், உலகமயமாக்கம், மனித உரிமைகள், ஜனநாயகம், லிபரலிஸம், மதச்சார்பின்மை முதலிய சிந்தனைகள் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாட்டை அல்லது சிந்தனையை முன்வைப்பதனையே நாம் நவீன இஸ்லாமிய சிந்தனை என சுருக்கமாக வழங்குகின்றோம்.


எம்மில் பலரும் தெரிந்து வைத்திருப்பது போன்று இஸ்லாம் ஒரு வாழ்க்கைத் திட்டம்தான். ஆனால் அது எப்படி ஒரு வாழ்க்கைத் திட்டமாக அமைய முடியும், மனிதனது பிரச்சினைகளுக்கான தீர்வை அது எப்படி முன்வைக்கின்றது, உலக பிரச்சினைகளுக்கான மையமாக அது எதனைக் கருதுகிறது? இன்னும் சொல்வதென்றால் ஜனநாயகம், லிபரலிஸம், மதச்சார்பின்மை பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு என்ன? போன்ற பல கேள்விகளுக்கான ஆழமான நுணுக்கமான பதில்கள் எமது சூழலில் படித்த பலரிடம் கூட இல்லாமலிருப்பது மிகவும் வேதனைக்குரியது.

இத்தனைக்கும் அரபுலகில் இவை குறித்த ஆய்வுகளும் கருத்தாடல்களும் பல தசாப்தங்களுக்கு முன்னமே –சிலபோது ஒரு நூற்றாண்டு என்று கூடச் சொல்லலாம்- தொடங்கி விட்டது என்ற செய்தியையும் சொல்லியாக வேண்டும். -அரபு சூழலில் நேரகாலத்தோடு இந்த வளர்ச்சி வந்ததற்கு வேறு பல காரணங்கள் இருக்கின்றன. அது தனியாக கலந்துரையாடப்படல் வேண்டும்.-

பரந்து விரிந்த ஆய்வுப் பரப்பைக் கொண்ட நவீன இஸ்லாமிய சிந்தனைத் தளத்தில் பல அறிஞர்கள் செயற்பட்டுள்ளனர். றஷீத் ரிழா, முஹம்மத் அப்துஹு, ஸெய்யித் குத்ப், இஸ்மாஈல் ராஜி பாரூகி, மௌலானா மௌதூதி, மாலிக் பின் நபி என்று விரிகின்ற இந்த சிந்தனையாளர் தொகை இஸ்லாத்தை ஒரு நாகரிகத் திட்டமாகவும் நவீன உலகின் விடுதலைக்கான திட்டமாகவும் முன்வைத்தனர். இவர்களது ஆய்வுகளும் நூல்களும் இன்று வரை இஸ்லாமிய சிந்தனையாளர்களது ஆய்வுகளுக்கான உந்துதல்களாக இருந்து வருகின்றமையும் அவதானிக்கத்தக்கது.

சமகால உலகிலும் இஸ்லாமிய சிந்தனைத் தளத்தில் பல அறிஞர்கள் செயற்பட்டு வருகின்றனர். கலாநிதி யூஸுப் அல்கர்ளாவி, ஷெய்க் றாஷித் அல்கன்னூஷி, கலாநிதி தாரிக் ரமழான், கலாநிதி முஹம்மத் இமாரா, கலாநிதி தாரிக் அல்பிஷ்ரி என்று விரிகின்ற இந்த சிந்தனையாளர் தொகை சமகால உலகில் இஸ்லாமிய சிந்தனைத் தளத்தில் மிக முக்கியமான ஆய்வுகளையும் கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர். இவர்களது எழுத்துக்களும் உரைகளும் உலகெங்கும் மிக ஆழமாக செல்வாக்குச் செலுத்தி வருகின்றன.

நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல் எமது தமிழ் மொழிச் சூழலைப் பொருத்தமட்டில் இஸ்லாத்தை ஒரு வாழ்க்கைத் திட்டமாக, நாகரிகத் திட்டமாக முனவைக்கும் பணி இன்னும் வலுப்படுத்தப்பட்டு விரிவுபடுத்தப்பட வேண்டிய தேவை இருக்கின்றது. இந்தப் பகுதியில் இஸ்லாமிய துறை சார்ந்த தனிநபர்கள் ஈடுபடுவதோடு இஸ்லாமிய ஆய்வு நிறுவனங்கள், இஸ்லாமிய கலாசாலைகளும் ஈடுபட வேண்டும். அவற்றிடமுள்ள நூலக வசதிகள், ஆய்வுச் சூழல் என்பன இதற்கான மிகப் பெரும் உதவிகளாக அமைந்து விடும்.

No comments:

Post a Comment