Sunday, September 28, 2014

வளர்ந்து வரும் தேர்தல் இலஞ்சம்!


(2014.09.14 ஆம் திகதிய ராவய பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம்)

தமிழில்: அஷ்கர் தஸ்லீம்

ஊவா மாகாண சபைத் தேர்தல் இலங்கை வரலாற்றில் மிகவும் மோசமான தேர்தலாக அடையாளப்படுத்தப்படுவதற்கான அடையாளங்கள் தெளிவாகத் தெரிகின்றன. ஒரு புறம் அதிகளவில் மீறப்படும் தேர்தல் விதிமுறைகள்; இன்னொரு புறம் ஆளும் கட்சி தனது பலத்தை முறையற்ற வகையில் பயன்படுத்வதும் அரச உடைமைகளை தனது நலனுக்காக பயன்படுத்துவதும்.

அடிக்கடி தேர்தல்கள் நடத்தப்படுவதன் மூலம் நாட்டில் ஜனநாயகம் உள்ளமை வெளிப்படுத்தப்படுவதாக ஜனாதிபதி கூறுகிறார். ஆனாலும், அடிக்கடி தேர்தல்கள் நடத்தப்படுவதன் மூலமும், அந்தத் தேர்தல்களை நடத்துவதில் அரசாங்கம் கைக்கொள்ளும் மோசமான வழிமுறைகள் மூலமும் நாட்டின் ஜனநாயகம் பாதாளத்துக்குச் சென்றுள்ளத்தை ஜனாதிபதி தெரிவிக்காமை ஆச்சரியத்துக்குரியதல்ல. ஏனெனில், அவர்தான் அந்த வழிமுறையின் ஸ்தாபகர்.

அதிகாரத்தில் உள்ள அரசாங்கம், தமக்கு சார்பாக உள்ள சந்தர்ப்பங்களில், தேர்தல்களை நடத்துவது இலங்கைக்கு புதியதொரு விடயம் அல்லாதபோதும், இவ்வாறு வருடம் முழுதும், நினைத்த நினைத்தவாறு தேர்தல்களை நடத்தும் வெட்கத்துக்குரிய வழிமுறை ஸ்தாபிக்கப்பட்டது மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அரசாங்கத்தின் மூலமே. இந்த ஒவ்வொரு தேர்தலும், தேர்தல் எவ்வாறு நடத்தப்படக்கூடாது என்பதற்கான சிறந்த உதாரணங்களுமாகும்.


அது மாத்திரமல்ல, 17 ஆம் அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் அடிப்படையில், வரையறைகளுடனேனும் கொண்டு வரப்பட்ட தேர்தல் கமிஷன் சபையின் அதிகாரங்களை இன்னும் குறைத்து, அதனை தற்போது பற்கள் அற்ற நிலைக்குத் தள்ளியதும் ஜனாதிபதியின் அதிகார ஆசைக்கு நன்மை கிடைக்கவே. இது 18 ஆம் அரசியலமைப்பு சீர்திருத்தம் மூலம் நடைபெற்றது. இந்த இரு சீர்திருத்தங்களின் மூலமும் தேர்தல் கமிஷன் சபை உருவாக்கப்பட்டபோதும், ஜனாதிபதி ராஜபக்ஷ ஒருபோதும் தேர்தல் கமிஷன் சபையை நியமிக்கவுமில்லை.

ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்கு அர்ப்பணித்திருப்பதாகச் சொல்லும் தலைவரொருவர், குறைந்தது தேர்தல் கமிஷன் சபையையேனும் நியமிக்காமலிருப்பது ஏன் என்பதுகூட எவருக்கும் பிரச்சினையாக இருப்பதாகத் தெரியவில்லை.

தேர்தல்கள் நடத்தும் வழிமுறை இவ்வளவு வெட்கத்துக்குரியதாக மாறுவதற்கு, அரசியலமைப்பு மூலமும் வேறு சட்டங்கள் மூலமும் இவ்வாறு பலவீனமடையச் செய்வதற்கு எடுக்கப்பட்டுள்ள முன்னெடுப்புக்கள் பாரியளவு செல்வாக்குச் செலுத்தியிருப்பது தெளிவானதாகும்.

முடியுமானளவு தேர்தல் விதிமுறைகளை மீறுவதற்கு மேலதிகமாக, வேறு தேர்தல்களில் போல ஊவா மாகாண சபைத் தேர்தலிலும் ஆளும் கட்சியின் நலனுக்காக அரச உடைமைகள் பாரியளவு பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிகிறது. அது தொடங்குவதும் ஜனாதியிலிருந்துதான்.

ஊவா உள்ளிட்ட ஏனைய அனைத்துத் தேர்தல்கள் நடக்கும்போதும் அரச செயற்றிட்டங்கள் பாரியளவு திறந்து வைக்கப்படுவதும், அடிக்கல் நாட்டப்படுவதும் நடைபெறுகின்றது. அதேவேளை, இவை அனைத்துக்காகவும் அரச அதிகாரிகளும் அரச உடைமைகளும் குறைவின்றிப் பயன்படுத்தப்படுகின்றது. இவற்றில் பலவும் ஜனாதிபதி அறிந்த நிலையிலும் அவரின் தலைமையிலுமே நடைபெறுகின்றன.

இவை எதுவும் ஜனாதிபதியினதோ முதலமைச்சர்களினதோ தனிப்பட்ட சொத்துக்களின் மூலம் கட்டப்படுபவை அல்ல. எல்லாக் கட்சிகளையும் சார்ந்த, நாட்டின் எல்லா மக்களினதும் வரியிலிருந்தோ அல்லது அவர்களை அடகு வைத்து வெளிநாடுகளிலிருந்து பெறப்படும் கடன்களிலிருந்தோதான் இவை கட்டப்படுகின்றன. இவ்வாறான செயற்றிட்டங்களை தாம் செய்தது போல, தமது அரசியல் நலனுக்காகப் பயன்படுத்திக் கொள்வதே வெட்கத்துக்குரிய தேர்தல் குற்றமாகும்.

பல ஊடகங்கள் தேர்தல் வேட்பாளர்கள் வாக்காளர்களுக்குப் பகிர்ந்தளிக்கும் மண்வெட்டி, சில் ஆடைகள், கைத் தொலைபேசி ஆகிய இலஞ்சங்கள் குறித்துத்தான் பேசுகின்றன. ஆனாலும், அரசாங்கம் வாக்காளர்களுக்குக் கொடுக்கும் பாரியளவு இலஞ்சம் குறித்து எவரும் இந்தக் கோணத்தில் பேசுவதில்லை.

ஊவா தேர்தலையும், எதிர்கால ஜனாதிபதித் தேர்தலையும் முன்னால் வைத்துக் கொண்டு, அரச அதிகாரிகளுக்கு மிகக் குறைந்த விலையில் ஒரு இலட்சம் மோடார் சைக்கிள்களை பகிர்ந்தளிக்கும் செயற்றிட்டமொன்றை, ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் அரசாங்கம் ஆரம்பித்து வைத்தது. இதற்கிடையில், 'திவி நெகும” மூலம், ஒரு வருடம் கழித்து பணம் அறவிடும் வகையில், மிகக் குறைந்த வட்டியுடனான கடன் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவும் திட்டமிடப்பப்பட்டுள்ளது.

இந்த இரண்டும் தெளிவான தேர்தல் இலஞ்சங்களாகும். மண்வெட்டி, கைத் தொலைபேசி போன்ற இலஞ்சங்கள் அவ்வந்த வேட்பாளர்கள் மூலம் அவர்களது செலவில் வழங்கப்படுகின்றவேளை, அரசாங்கம் உத்தியோகபூர்வமாக இலஞ்சம் வழங்குவது, இந்த நாட்டு மக்களிடமிருந்து நேரடியாகவோ மறைமுகமாகவோ பெற்றுக் கொள்ளும் வரியிலிருந்தாகும்.

இந்த அர்த்தத்தில் பார்க்கும்போது அரசாங்கம் மக்களிடமிருந்து சூறையாடும் பணத்திலிருந்து மக்களுக்கே இலஞ்சம் வழங்கும் வேலையைச் செய்கின்றது. ஒரு புறம், சாதாரண வேட்பாளர் வரை கீழுக்குச் சென்றிருப்பது அரசாங்கத்தின் மேலிருந்து தொடங்கும் இந்த இலஞ்சம் வழங்கும் முன்னுதாரணமாகும்.

நாட்டில் இருப்பது ஊழலுக்கு எதிரான மக்களாயின், தேர்தல்களில் அந்த எதிர்ப்பு தெரிவிக்கப்படல் வேண்டும்.

No comments:

Post a Comment