Thursday, September 4, 2014


அஷ்கர் தஸ்லீம்

உலக அரசியல் நெருக்கடிகளின் பின்னால் பல காரணிகள் தொழிற்படுகின்றன. அவ்வாறே பிராந்திய அரசியல் நெருக்கடி மற்றும் பதட்டங்களின் பின்னணியிலும் பல்வேறு உள்ளாந்த காரணிகள் தொழிற்படுவதனை அவதானிக்கலாம். இப்பின்னணியில் தெற்காசியாவின் ஸ்திரத்தன்மையை பாதிக்கும் பிரதான காரணியாக மதத் தீவிரவாதத்தைக் குறிப்பிடலாம்.

தெற்காசியாவின் மிகப் பெரிய நாடும், உலகளவில் மிகப் பெரும் ஜனநாயக நாடுமான இந்தியாவில் உள்ள இந்துத்துவா மதத் தீவிரவாதம் குறித்த அறிமுகக் குறிப்பையே இங்கு தர முயல்கின்றேன்.

தெற்காசியாவில் மிகப் பெரும் நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகியன ஆங்கிலேய ஆக்கிரமிப்புக்கு முன்னர் ஒரே நாடாகவே அடையாளப்படுத்தப்பட்டு வந்தது. இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது ஏற்பட்ட கசப்புணர்வுகள், தப்பபிப்பிராயங்களின் விளைவாக இந்தியா பிளவுண்டது.

எனவே, முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்டமைந்த வட மேல் மற்றும் கிழக்குப் பகுதிகள் பாகிஸ்தான் என்ற பெயரோடு தனி நாடாகப் பிரிந்து சென்றன. பின்னர், நிலத்தொடர்பற்றிருந்த பாகிஸ்தானின் மேற்குப் பகுதியும் கிழக்கும் பகுதியும் பிரிந்து கிழக்குப் பகுதி பங்களாதேஷ் என்ற நாடானது.


முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பகுதிகள் பாகிஸ்தான், பங்களாதேஷ் என்று பிரிந்து சென்றபோதும், எஞ்சிய இந்தியாவிலும் பெருமளவு முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழ்கின்றனர். மொத்த இந்திய சனத்தொகையில் இவர்கள் 10 வீதம். உலக முஸ்லிம் சனத்தொகையில் இந்தோனேஷியாவுக்குப் பின்னர் அதிக முஸ்லிம்கள் வாழ்வது இந்தியாவில்தான்.

இந்தியா குறித்த இந்த அறிமுகத்தோடு, இந்துத்துவா குறித்த அறிமுகத்துக்குள் நுழைவோம். இந்துத்துவா என்பது முழு மொத்த இந்தியாவையும் இந்து தேசமாகக் கொண்டு, இறந்துபோன சமஸ்கிருத மொழியை உயிர்ப்பித்து இந்து ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்பும் கோட்பாடாகும்.

இந்த மதத் தீவிரவாத சிந்தனை இந்திய சுதந்திரத்திற்கு முன்னரேயே பலராலும் பிரசாரப்படுத்தப்பட்டு வந்தது. இந்த சிந்தனையைப் பிரதிநிதித்துவம் செய்யும் பல்வேறு இயக்கங்களும் அரசியல் கட்சிகளும் இந்தியாவில் செயற்படுகின்றன. தற்போ இந்தியாவின் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கும் பாரதிய ஜனதா கட்சியும் இந்தத் சிந்தனை முகாமைச் சார்ந்த கட்சியாகும்.

ராஷட்ரிய சுயம் சேவக் சங் (RSS) என்பதுதான் இந்துத்துவா கோட்பாட்டைப் பேசும் முதன்மை இயக்கமாகும். இந்த இயக்கம் பல்வேறு கிளை இயக்கங்களை கொண்டியங்குகின்றது. சுளுளு அரசியல், பொருளாதாரம், கல்வி, சமூக சேவைகள், தொழிலாளர் மற்றும் மாணவர் நலன் ஆகிய துறைகளில் கவனம் செலுத்தி இந்துத்துவா சிந்தனையைப் பரப்பி வருகின்றது. பஜ்ரங்தள், பாரதிய ஜனதா கட்சி என்பனவெல்லாம் இந்த முதன்மை இயக்கத்தின் வழிவந்தவைதாம்.

இந்துத்துவா தீவிரவாத முகாம் பிரதானமாக முன்வைக்கும் கருத்து, இந்தியா இந்துக்களுக்கு உரிய தேசம் என்பதாகும். இதனையே இவர்கள் ‘இந்து ராஷ்ட்ரா’ என்று அழைக்கின்றனர். இந்தப் பின்னணியலேயே இந்திய முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீது இவர்கள் வன்முறைகளைக் கட்டவிழ்த்து வருகின்றனர்.

இந்துத்துவா தீவிரவாத முகாம் தமது பிரதானமான மூன்று எதிரிகளாக முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் தலித்களையும் கட்டமைத்து வைத்துள்ளது. இந்துத்துவா முகாமைப் பொறுத்தவரை முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் இந்தியரல்லாத வெளிநாட்டவர்களாகவே கருதப்படுகின்றனர். எனவே, இவர்கள் ஒன்றில் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் அல்லது அடிப்படை உரிமைகளின்றி வாழ வேண்டும் என்பதுவே அவர்கள் கருத்து.

இந்திய சுதந்திரத்திற்குப் பின்னர் முஸ்லிம்களுக்கு எதிரான நடத்தப்பட்ட மிகக் கொடூரமான வன்முறையாக 2002 இல் நடத்தப்பட்ட குஜராத் கலவரம் அடையாளப்படுத்தப்படுகின்றது. 1000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் இந்த வன்முறைகளின்போது கொல்லப்பட்டனர்.

இந்துத்துவா சக்திகள் நடத்திய இந்தத் தாக்குதலின்போது, அப்போதைய குஜராத் முதல்வராக தற்போதைய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இருந்தார். மோடி இந்த வன்முறைகளுக்கு மௌன அங்கீகாரம் வழங்கியிருந்தார். எனவே, இது குறித்து அவர் சர்வதேச அளவில் பலத்த விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தார்.

RSS இயக்கம் இந்து இளைஞர்களைப் பயிற்றுவிக்கும் வேலையையும் செய்கின்றது. மிகுந்த கட்டுப்பாடோடு இளைஞர்கள் இதில் பயிற்றுவிக்கப்படுகின்றனர். பின்னர் முஸ்லிம் விரோத பிரச்சாரங்கள், வன்முறைகளில் இவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். 2000 ஆம் ஆண்டில் இந்தியா முழுதும் RSS இயக்கத்துக்கு 45,000 கிளைகள் இருந்துள்ளன.

ஏற்கனவே, கூட்டமைப்பு அரசாங்கத்தை நடத்தி பின்னர், காங்கிரஸ் கட்சியிடம் தோற்றுப்போன இந்துத்துவாவைப் பிரதிநிதித்துவம் செய்யும் பாரதிய ஜனதா கட்சி தற்போது மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. முன்னாள் குஜராத் மாநில முதல்வாரன நரேந்திர மோடியை தற்போதைய பிரதமராக உள்ளார். மிகப் பெரியதொரு ஊடக விளம்பர நடவடிக்கை மூலம் தனது நன்மதிப்பை உயர்த்தியதன் மூலமே இவர் ஆட்சிக்கு வந்துள்ளார்.


பாரதியா ஜனதா கட்சியின் ஆட்சி இந்திய சிறுபான்மை இனங்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தையே ஏற்படுத்தியுள்ளது. இந்துத்துவா தீவிரவாதம் தொடர்ந்தும் சிறுபான்மையினரை அச்சுறுத்தும் வகையில் செயற்படுமாயின், அது இந்தியாவின் ஸ்திரத்தன்மையை பாதிக்கும். இந்துத்துவா சக்திகள் தாம் எதிர்பார்ப்பது போன்று இந்து ராஷ்டிரத்தை அமைப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

No comments:

Post a Comment